பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 151 உட்கார்ந்து வேதனை அளிக்கும் மனத்தை ஆற்ற முயன்று கொண்டிருந்தாள். மனப்புண் ஆறவில்லை; எப்படி ஆறும்? யாருடைய மனத்தைப் புண்படுத்தும் போது தன் மனத்திலும் அந்தப் புண் உறைக்குமோ அவனுடைய மனத்தையல்லவா அவள் புண்படுத்தி இரணமாக்கி விட்டு ஓடி வந்திருக்கிறாள்! அப்பொழுதே மதுரைக்கு ஒடிப்போய் அரவிந்தன் எங்கிருந்தாலும் அவனைச் சந்தித்து உண்மையைச் சொல்லிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அன்றிரவு முழுவதும், உறக்கமும் நிம்மதியும் இன்றித் தவித்தாள் அவள்.

மறுநாள் காலை அவளுக்குக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. பாறாங்கல்லைத் தூக்கி வைத்த மாதிரி மண்டை கனத்தது. கண்கள் எரிந்தன. எழுந்து நடமாட முடியாமல் உடம்பு தள்ளாடியது. கமலாவின் தாயார் வந்து பார்த்துவிட்டு, 'நீ பேசாமல் படுத்துக் கொள் பூரணி. காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது. வைத்தியருக்கு ஆள் அனுப்புகிறேன். குழந்தைகள் இன்றைக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக் கூடம் போகட்டும். இந்த உடம்போடு நீ சிரமப்படவேண்டாம்' என்று சொல்லிச் சென்றாள். காய்ச்சலோடு மனத் துன்பங்களும் சேர்ந்து கொண்டு அவளை வதைத்தன. பிறரிடம் மனம் விட்டுச் சொல்லமுடியாத ஊமைக் குழப்பங்களால் உழன்று கொண் டிருந்தாள் அவள். அரவிந்தனிடம் உண்மை நிலையைக் கூறி மன்னிப்புப் பெற்றாலொழிய அந்த ஊமை வேதனை அவள் மனத்திலே தணியாது போலிருந்தது.

வைத்தியர் வந்து மருந்து கொடுத்து விட்டுப் போனார். குழந்தையும் தம்பிகளும் கமலாவின் வீட்டில் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் போனார்கள்! அவளுக்குக் கூடக் கமலாவின் அம்மாதான் பார்லியரிசிக் கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குளுகோஸ் கரைத்துக் கொடுத்தாள். வாய் விளங்காமற் போய்விட்டது போல் எதைச் சாப்பிட்டாலும் கசப்பு வழிந்தது. நெஞ்சில் வந்து நிறைந்து கொண்டிருக்கும் கசப்பு எல்லாப் புலன்களுக்கும் பரவி விட்டதா, என்ன? இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/153&oldid=555877" இலிருந்து மீள்விக்கப்பட்டது