பக்கம்:சாவி-85.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் போகும் செய்தியைச் சொல்லிக் கொள்ளப் போதிய அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அச்சமயம் மணியன்தான் எடிட்டோரியல் சம்பந்தப்பட்ட எல்லா பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடம் தன் சிம்லாப் பயணம் பற்றிக் குறிப்பிட்டு, பாலு அவர்களிடம் தகவல் சொல்லி விடும்படி கேட்டுக் கொண்டார். "பரவாயில்லை; நான் சொல்லிக் கொள்கிறேன். அவர்தான் 'ஏ.வி.எம். அவுட்டோர் இருந்தால் போகலாம் என்று சொல்லி இருக்கிறாரே, பிறகென்ன? நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள்' என்று கூறி சாவியை அனுப்பி வைத்தார் மணியன். ஏ.வி.எம். நிறுவனம் சாவி அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியது. சிம்லாவில் குளிர் தாங்காது என்று குளிர்கால உடை கூடத் தைத்துக் கொடுத்தது. ஏ.வி.எம்மின் புதல்வர் எம்.சரவணன், டைரக்டர் திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன், சாவி நால்வரும் டில்லி வரை விமானத்தில் சென்று அங்கிருந்து தனிக் காரில் பயணித்து சிம்லா போய்ச் சேர்ந்தார்கள். எம்.ஜி.ஆருடன் அவரது தனி மருத்துவர் டாக்டர் சுப்பிரமணியன் அவர்களும் போயிருந்தார். சிம்லாவில் படப்பிடிப்பின்போது சாவி எதிர்பாராத ஒன்று நடைபெற்றது. புதிய வானம் புதிய பூமி என்ற பாடலுக்கான காட்சி அங்கே படமாக்கப்பட்டபோது திடீரென சாவியையும் டாக்டர் நண்பரையும் தம் பக்கத்தில் அழைத்து அவர்கள் இரண்டு பேர் தோள் மீதும் கை போட்ட வண்ணம் எம்.ஜி.ஆர். வேகமாக நடந்து செல்வது போல எடுக்கப்பட்டது. இப்போது பார்த்தாலும் அந்தப் பாடல் காட்சியில் சாவியும் சில வினாடிகள் திரையில் காணப்படுவார். 195

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/213&oldid=824585" இலிருந்து மீள்விக்கப்பட்டது