பக்கம்:சாவி-85.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஆனாலும் தி.ஜ. ர.வின் யோசனைப்படியே சாவி ஒரு விளம்பரம் வெளியிட்டார். அதுவும் ஹநுமான் பத்திரிகையில் தி.ஜ.ர.வே தம் சொந்தப் பொறுப்பில் வெளியிட்டு உதவினார். தி.ஜ.ர.வின் கணிப்பு பொய்யாகவில்லை. விளம்பரம் வந்த மறுநாள் மாலை சாவியும் தி.ஜ.ர.வும் கடற்கரை நோக்கி தம்பு செட்டித் தெரு வழியாக நடந்து கொண்டிருந்தபோது ஆனந்த விகடனிலிருந்து சைக்கிளில் வந்த பியூன் அவர்களைத் துரத்தி வந்து சாவியின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். 'Please go over here immediately as the Editor wants to See you என்று ஒரு சின்னக் காகிதத் துண்டில் எழுதி உதவி ஆசிரியர் தேவன் கையெழுத்திட்டிருந்தார். 'நம்ம கணிப்பு எப்படி?’ என்று தி.ஜ.ர. சாவியைப் பார்த்துக் கண் சிமிட்டினார். சாவி மறுநாள் காலை பதினோரு மணி அளவில் பிராட்வேயில் உள்ள விகடன் அலுவலகம் போய் கல்கி அவர்களைப் பார்த்தார். சாவியை ஏற இறங்கப் பார்த்த கல்கி 'நீதானா அந்த விளம்பரம் போட்டது? சில நாட்களுக்கு முன் இங்கே வந்து வேலை கேட்டது நீதானே? என்று கேட்டார். "ஆமாம்” என்றார் சாவி. 'பத்திரிகை நடத்தப் பணம் போடப் போவது யார்?" அப்போதைக்கு சட்டென்று மனதில் தோன்றிய உறவினர் ஒருவர் பெயரைச் சொல்லி வைத்தார் சாவி, 'இப்போது உனக்கு விகடனில் உதவி ஆசிரியர் வேலை தர முடியும். சம்மதமானால் நாளைக்கே வேலைக்குச் சேர்ந்து கொள். சம்பளம் நாற்பது ரூபாய். என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார் கல்கி. 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/55&oldid=824872" இலிருந்து மீள்விக்கப்பட்டது