பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

செந்தமிழ் பெட்டகம்

உள்ளத்தில் இருந்தமை இந்நூலால் தெரிகிறது உயிர் கட்குறுதியெனக் கூறும் அறம் பொருள் இன்பம் என்ற முப் பொருளையும்போல இவ்வேந்தர் மூவரும் சான்றோர்களால் சுட்டப்படுகின்றனர் (31); ஒரு சான்றோர், இறைவன் திருமுகத்தில் விளங்கும் முக்கண் போல்வர். இம் மூவேந்தரும் (55) எனக் குறிக்கின்றார்; ஒளவையார், இம்மூவரையும், “இருபிறப்பாளர் முத்தீப் புரையக் காண்டக இருந்த வேந்தர்” (367) என்று இனிமையாகப் பாடுகின்றார்.

இவர்கட்கு இத் தமிழகம் பொதுவென்பது தோன்றப் “பொதுமை சுட்டிய மூவருலகம்” என்பர் இம்மூவரும் மனமொத்து ஒருங்கிருக்கும் காட்சியைக் காணும் சான்றோர், “நீவிர் உடனிலை திரியீராயின், பெளவம் உடுத்த பயங்கெழு மாநிலம், கையகப்படுவது பொய்யாகாது” (58) என்று வற்புறுத்துகின்றனர்; அடிக்கடி நிகழும் போர்களால் நாடுகள் பாழாவதைப் பல பாட்டுக்களில் அரசர்கட்கு எடுத்துக்காட்டி அறிவு கொளுத்துகின்றனர்

இனி, குறுநிலத் தலைவர் பலரும் இம்மூவர் நாடுகளில் இருந்து சிறந்தவர் சேரநாட்டுத் தலைவர்களில் அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய் அண்டிரன், ஏறைக்கோன், குமணன், பிட்டங்கொற்றன், வாட்டாற் றெழினியாதன் முதலிய பலர் விளக்கம் பெறுகின்றனர் சோழ நாட்டுக் குறுநிலத் தலைவர்களில் ஆதனுங்கன், கடுமான்கிள்ளி, கண்டீரக்கோப்பெரு நள்ளி, கரும்பனூர் கிழான், சிறுகுடிகிழான் பண்ணன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன், தாமான் தோன்றிக் கோன், திருக்கண்ணன், திருக்கிள்ளி, நல்லியக்கோடன், நல்லேர் முதியன், பெருஞ்சாத்தன் பொறையாற்றுக் கிழான், மலையமான் திருமுடிக்காரி, வல்வில் ஒரி, விச்சிக்கோ, விண்ணந்தாயன், வில்லியாதன் முதலியோர் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றனர்