பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

265

நாள் உதயணன் வேட்டையாடச் சென்றிருந்தபொழுது சாங்கிய தாய் என்பவளது உதவியால் வாசவதத்தையை அழைத்துக் கொண்டு, உதயணன் தங்கியிருந்த வீட்டுக்கும் நெருப்பை வைத்துவிட்டுச் சென்று விட்டான். வேட்டையாடித் திரும்பி வந்த உதயணன் தன் வீடு எரிந்திருப்பது கண்டு, வாசவதத்தையும் இறந்து போனாள் என எண்ணி வருத்தினான். பிறகு இறந்து போன யூகி, வாசவதத்தை ஆகியோரைப் பிழைக்கச் செய்யும் நோக்கத்துடன் இராசகிரி என்ற மலையிலிருந்த பெரியவர் ஒருவரிடம் சென்றான்.

இராசகிரிக்குச் சென்ற உதயணன் அந்நகரத்தரசனின் தங்கையாகிய பதுமாபதியை மணந்து, பின்பு கெளசாம்பிக்கு வந்து, அந்நகரை ஆண்டான் அங்கு யூகி, வாசவதத்தையுடன் வந்து சேர்ந்தான். அவர்களைக் கண்ட உதயணன் மகிழ்ச்சி மிகக்கொண்டான் பிறகு உதயணன் மானனீகை, விரிசிகை என்பவர்களையும் மணந்தான். சில ஆண்டுகளுக்குப் பின் வாசவதத்தையின் வயிற்றில் நரவாண தத்தன் என்பவன் பிறந்தான். அவன் வளர்ந்து மதன மஞ்சிகை என்பவளை மணந்தான் மதனமஞ்சிகையை ஒருமுறை வித்தியாதரன் ஒருவன் தூக்கிச் செல்லவே, நரவாணதத்தன் அவனுலகை அடைந்து, ஆண்டிருந்த அரசர்களை வென்று, வித்தியாதரச் சக்கரவர்த்தியாக வாழ்ந்தான். பின்பு உதயணன் தனக்குப் பதுமாபதியினிடம் பிறந்த கோமுகனுக்கு அரச பதவியை அளித்துவிட்டுத் துறவு பூண்டு, தவஞ்செய்யச் சென்றான்.

இந்நூல் பெருங்காப்பிய வகையைச் சார்ந்தது ஆசிரியப்பாவால் அமைந்தது உதயணன் உச்சயினி நகரத்துப் பட்டத்து யானையை அடக்கியது முதல், வித்தியாதரன் மதன மஞ்சிகையைத் தூக்கிச் சென்றது வரையில் உள்ள வரலாறே இப்பொழுது கிடைத்துள்ளது. அவை உஞ்சைக் காண்டம், இலாவான காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவான-