பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

271

அழுதாய்' உடலுக்கழுதாயோ உயிர்க்கு அழுதாயோ; உடலுக்காக அழுதேன் என்று சொல்வாயானால் இறந்த உன் மகனைப் புறங்காட்டில்கொண்டு இட்டவர் யார்? உயிர்க்கு அழுதேன் என்பாயேயானால் அது புகும் புக்கில் தானும் தெரிந்து உணர்தல் அருமையாம் உண்மையில் அந்த உயிர்க்கு நீ அன்புடையவளாயிருந்தால் எல்லா உயிர்க்கும் நீ அன்புடையவளாக இருத்தல் இன்றியமையாதது” என வற்புறுத்தினள் (23. 71-79)

இறந்தவர் பொருட்டு இரங்குதலின் பயனின்மை, உயிர், உடல் ஆகியவற்றின் இயல்பை வேறு வேறுபிரித்துணரும் திறம் ஆகியவை இந்நூலில் அமைந்து கிடக்கின்றன மேலும் இவ்வாசிரியரது புலமை நலமும், கவிதை புனையும் ஆற்றலும் அறிந்து இன்புறுதற்குரியன

உண்மைப் பொருளை யுணர்தற்குத் தருக்க அறிவு இன்றியமையாதது மெய்ப்பொருள் அருளுக என்ற மேகலைக்கு அறவண அடிகள் அருள் புரிந்ததாக இருபத்தொன்பதாவது காதையில் கூறப்படுகின்றது

அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறும் நெறியில் சாத்தனார், பெளத்த மதக் கருத்துகளை முப்பதாவது காதையில் கூறியிருக்கின்றார்

தண்டமிழ்ச் சாத்தனார் அறிவாற்றல் அமையச் சீரிய வகையில் மணிமேகலையை யாத்துள்ளார்