பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


4. நீலகிரி மலைகள்

பெயர்க் காரணம் :

நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி என்ற பெயர் 800 ஆண்டுகளாக வழங்குகிறது. நீலகிரிக்கு அண்மையிலுள்ள சமவெளியில் நின்று மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடே நிமிர்ந்து நிற்கும் இதைக் காணும்போது, நீல நிறமான படலம் இம்மலையைப் போர்த்திருப்பது போல் தோன்றும். ஆகையினாலேயே இதை நீலகிரி என்று அழைக்கின்றனர். நீலகிரி மலையில் நீல நிறமான (Violet) ஒரு பூ எங்கும் நிறைந்து மலர்ந்திருக்கிறது. அம்மலரினாலேயே நீல நிறமான படலம் தோன்றுவதாகக் கூறுகின்றனர். அந்நீலப்பூ நீலகிரி மலையின் வெளிப்புறத்தில் பூப்பதில்லை. மலையின் நடுவிலுள்ள பீட பூமிகளிலேயே பூக்கிறது. ஆகையினால் மலையைச் சுற்றி ஏற்படும் நீல நிறப்படலம் அம்மலர்களால் ஏற்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.

அமைப்பு :

நீலகிரி மலை, மேலே மட்டமான ஒரு மேசையைப் போல் அமைந்திருக்கிறது. இதன் உயரம் எல்லாப் பகுதிகளிலும் ஏறக்குறைய ஒரே அளவுடையதாக உள்ளது. நீலகிரி மலை 35 கல் நீளமும் 20 கல் அகலமும் சராசரி 6500 அடி உயரமுமுடையது. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சேரும் இடத்தில் இது அமைந்துள்ளது. இம்மலையில் ஒரு சதுரமைல் கூடச் சமநிலத்தைக் காண முடியாது. எங்கு பார்த்தாலும் மேடும் பள்ளங்களுமே தென்படும், இது சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்துள்ளது.