பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

என்பது ஒரு கொள்கை. சமவெளியில் பரவியிருக்கும் விஞ்ஞான நாகரிகத்தை வலியப் புகுத்தி, அவர்களையும் நம் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது மற்றொரு கொள்கை. கி. பி. 1936-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாட்டுச் சட்டசபை ஒன்றில், "பழங்குடி மக்களை ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் வகையில், பொருட்காட்சி சாலைகளில் ஏன் அடைத்து வைக்க லாகாது?” என்று ஓர் உறுப்பினர் கேட்டார். அச் செயல் மனிதத் தன்மைக்குப் புறம்பானது என்று வேறு பல உறுப்பினர்களால் கண்டிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த பெரும் புலவனான ஜான்சனும், அவன் நண்பன் பாஸ்வெல்லும், 'பழங்குடி மக்கள், பண்பட்ட மக்கள் ஆகிய இருவர் வாழ்க்கையில் எது உயர்ந்தது?' என்பது பற்றிக் காரசாரமான உரையாடல் நிகழ்த்தி யிருக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நாடகப் புலவரான சேக்ஸ்பியர்கூட, தாம் எழுதியுள்ள புயல் (Tempest) என்ற நாடகத்தில் காலிபன், பிராஸ்ப் பெரோ, ஸ்டீஃபெனோ. டிரிங்குலோ, அந்தோணியோ, ஆலன்சோ என்ற பாத்திரங்களின் மூலம் பழங்குடி வாழ்க்கையையும் நாகரிக வாழ்க்கையையும் விளக்கிக் கொண்டு செல்லுகிறார். காலிபனைப் பற்றித் திறனாய்வாளர் (critics) குறிப்பிடும்போது, “அவன் ஒரு மடையன் ; வெறி கொண்டவன். தீங்கிழைக்கும் பண்பு அவன் உள்ளத்தில் ஊறியது. அவனைப் பண்பட்டவனாக ஆக்கப் பிராஸ்ப்பெரோ எவ்வளவோ முயன்றான், அம் முயற்சி காலிபன் உள்ளத்தில் பொறாமை, தன் தாழ்ந்த நிலை கண்டு அதிருப்தி, மிராந்தாவின் மேல் சபலம், எதிர்ப்புணர்ச்சி, குடிவெறி ஆகிய தீப்பண்புகளையே கிளப்பிவிட்டது' என்று கூறுகின்றனர்.