பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

ஒரு திங்களோ அவள் இருக்க வேண்டும். குழந்தையின் முகத்தை மூன்று திங்கள்கள் முடியும் வரை யாரும் பார்க்கக் கூடாது. ஆகையினால் ஒரு துணி கொண்டு அதன் முகத்தை மூடியே வைப்பார்கள். குழந்தைக்கு முடி யெடுக்கும்போது பெயரிடுவார்கள்.

சொத்து முறை :

ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை ஏழாவது மாதச் சடங்கின்போது குறிப்பிடப்பட்ட கணவனுக்கே உரிமையானது. அவனுடைய சொத்தெல்லாம் அக் குழந்தையையே சாரும். வேறொருவர் குழந்தையைத் தத்தெடுக்கும் வழக்கம் இவர்களிடம் இல்லை. பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. இச்சொத்துரிமை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு அமர்த்தப்பட்டவரை மோணிகர் (Monigar) என்று அழைக்கின்றனர். ஆனால் தோடரிடையே இருக்கும் பஞ்சாயத்துச் சபை, மோணிகரைவிடச் செல்வாக்கு மிகுந்ததாக உள்ளது. அப்பஞ்சாயத்தின் தீர்ப்பையே எல்லாரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இறுதிச் சடங்கு :

தோடர்களின் இறுதிச் சடங்கு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பச்சை இறுதிச் சடங்கு (Green Funeral), காய்ந்த இறுதிச் சடங்கு (Dry Funeral) கடைசி இறுதிச்சடங்கு (Last Funeral) என்பவையே அப்பிரிவுகள். முதன் முதலாக இறந்துபோனவனை ஆடை அணிகளால் அலங்கரித்து, ஒரு குடிசையில் கொண்டுபோய் வைப்பார்கள். பெண்கள் இணை இணையாக ஒருவர் நெற்றியோடு மற்றொருவர் முட்டிக் கொண்டு கூச்சலிட்டு அழுவார்கள். அப்பொழுது புனித எருமைகளில் இரண்டைப் பலியிட வேண்டும். அதற்காகப் புனித எருமைகளை ஷோலாவில் ஓட்டி அச்சுறுத்துவார்கள். அவை மருண்டு சினங்கொண்டு