பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

இதைப் பயன் படுத்தப் பின்னர் முடிவு செய்தனர். கி. பி. 1823-ஆம் ஆண்டிலிருந்து, இது பல மாறுதல்களுக்குட்பட்டுப் பல வழிகளிலும் முன்னேறியது. கி. பி. 1896-லிருந்து 1899 வரையில் ரூ.20,000 இதற்குச் செலவிடப்பட்டது. இப்போது இவ்வேரியைச் சுற்றி மரங்களடர்ந்த காடு ஒன்றுள்ளது. அமைதியான அழகு அவ்விடத்தில் குடி கொண்டிருக்கிறது. உதகை மக்கள் இவ்வேரியில் தோணியூர்ந்தும், மீன் பிடித்தும் இன்பமாகப் பொழுதைக் கழிக்கின்றனர். ஏரியின் எதிர்க் கரையில் பெர்ன் மலை தொடங்குகிறது. ஏரியைச் சுற்றி நடந்து சென்றால், நம் உள்ளத்திற்கும் உடலுக்கும் ஒரு விதப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஏரியின் கரையோரமாகக் கடைவீதியை நோக்கி நடந்து சென்றால் ஹோபர்ட் பூங்கா (Hobert Park) வின் எல்லையை அடையலாம். அவ்விடத்தில் குதிரைப் பந்தய மைதானமும் பார்வையாளர் இருப்பிடமும் (Pevilian) அமைந்துள்ளன. குதிரைப் பந்தய வீரர்களையும், பொழுது போக்கிற்காகக் குதிரை மீதும், கோவேறு கழுதை மீதும் சவாரி செய்வோரையும் அங்குக் காணலாம். அக்காட்சி மிகவும் வேடிக்கையானதாக இருக்கும்.

இன்பச் செலவிற்குரிய இடங்கள் (Excursions)

அவலஞ்சி :

உதகமண்டலத்தைச் சுற்றி இன்பமாகப் பொழுது போக்கற்குரிய பல இடங்களும், கண்டு மகிழ்தற்குரிய பல இடங்களும் உள்ளன. கெய்ரன் மலையில் உள்ள காடுகளின் ஒருபகுதி பனிப்படலத்தில் மறைந்து தோன்றும், உதக மண்டலத்திலிருந்து 15-ஆவது கல்லில் இக்காட்சி அமைந்துள்ளது. இவ்விடத்திற்கு 'அவலஞ்சி' என்று பெயர். அவலஞ்சி (Avalanche) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'இழிந்து