பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

யைத் திருவாளர் ஹேமில்டன் முதன் முதலாகக் கண்டு வெளியிட்டார். இவ்வேரியைப் பற்றிய முன் குறிப்புக்களோ, செவி வழிச் செய்திகளோ கூடக் கிடையாது. நீர் மட்டம் இருந்த அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. அவ்வடையாளங்களை வைத்துக்கொண்டே அவ்விடத்தில் ஓர் ஏரி இருந்திருக்க வேண்டுமென்று அவர் முடிவு கட்டினார். அவ்வேரி ஏறக்குறைய 5 கல் நீளமும், 1 கல் முதல் 2 கல் வரை அகலமும், 30 அடி முதல் 70 அடி வரை ஆழமும் உடையதாக இருந்திருக்க வேண்டும் என்று கணக்கிட்டிருக்கிறார். ஒரு பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டு படிந்திருந்த மலைத் தொடர், இயற்கையாக இவ்வேரி அமைவதற்குக் காரணமாக இருந்தது. இத் தொடர் வடக்கு நோக்கி அமராவதி ஆறுவரை செல்லுகிறது. இவ் வேரியில் விழுந்த ஓர் அருவியைத் தடுத்து நீரை இத் தொடர் தேக்கி வந்தது. ஆனால், திடீரென்று அணைபோல் இருந்த அத் தொடர் பிளவுபட்ட காரணத்தால் ஏரியில் நீர் தேங்குவதில்லை. அணைபோல் தடுத்திருந்த அத் தொடர் 200 கெஜ நீளம் உள்ளது. அதில் ஏற்பட்டிருக்கும் பிளவு 100 கெஜ அகலமும் 90 அடி ஆழமும் உள்ளது. மேஜர் ஹேமில்டன், 'இவ்விடம் ஓர் அழகிய குறிஞ்சி நகரமோ , படையினரின் பாடியோ (Contonement) அமைப்பதற்கு மிகவும் ஏற்றது' எனக் குறிப்பிட்டார். ஆனால் இவ்விடம் சென்றடைதற்கரியது என்று பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோடைக்கானலானது, தற்போது அமைந்திருக்கும் இடத்தில் முதன் முதல் கட்டப்பட்ட போது, 'இயற்கை அழகுமிக்க எவ்வளவோ இடங்கள் பழனி மலை மீது இருக்க இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தது அறியாமை' என்று பலர் குற்றம் சாட்டினர். அவர்களுக்கும் இதே காரணத்தைத்தான் கூற வேண்டும். பெரிய குளத்திலிருந்து பழனி மலையின் உச்சியை அடையப் புழக்கத்திலிருந்த குதிரைப் பாதைக்கு