பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237

அமைக்கப்பட்டது. பெரிய குளத்திலிருந்து வரும் குதிரைப்பாதையை, பீடபூமியின் தெற்கு எல்லையிலுள்ள பாம்படி ஷோலா (Pambadi Shola) வரை அமைத்தார். நகரினுள்ளும் பல பாதைகளை அமைத்தார். ஐரோப்பியப் பழவகைகளையும் பூவகைகளையும் பழனிமலையின் மீது பயிரிடுவதற்குப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவரும் இவரே.

கி. பி. 1853-ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்தவர்கள் 'சன்னிசைட்' (Sunny Side) என்ற இடத்திற்கருகில் தங்களுக்குரிமையான நிலத்தில் ஒரு கோவில் கட்டத் தொடங்கினர். அது 1856-ஆம் ஆண்டு முடிவுற்றது. ஆங்கிலிகன் மிஷனைச் சார்ந்தோரும் அக்கோவிலிலேயே வழிபாடு நிகழ்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அக்கோவிலைச் சுற்றி ஓர் இடுகாடு அமைக்கப்பட்டது. (இப்போது அது மூடப்பட்டு விட்டது) முதன் முதலாக அவ்விடுகாட்டில் அமைக்கப்பட்ட சமாதி இரு குழந்தைகளினுடையது. அக்குழந்தைகள் கி. பி. 1819-ஆம் ஆண்டு இறந்தன; நகருக்குச் சிறிது தொலைவிலுள்ள நேபோமலை {Mount Nebo) யில் புதைக்கப்பட்டன. அவைகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, இங்குக் கொண்டு வந்து புதைக்கப்பட்டன. கி. பி. 1896-ஆம் ஆண்டு இக் கோவில் கோடைக்கானல் கழக (club) த்திற்கு அண்மையில் புதிதாகக் கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டது. பிறகு பழைய கோவில் அழிவுற்றது. கி. பி. 1863-ஆம் ஆண்டு செயிண்ட் சைர், கோடைக்கானலுக்கு வந்தார். கத்தோலிக்கரில் முதன் முதலாக வந்த பாதிரியார் இவரே. இவர் திருவாளர் பேன்ஸின் மனையை விலைக்கு வாங்கினார் ; இப்போது கோடைக்கானலிலிருக்கும் ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குக் கால்கோளிட்டார். ஆங்கிலிகன் திருச்சபைக் கோவிலை அமைப்பதற்காக நேபோ மலையில்