பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கீழ் அறையில் வெப்பமானி பொருத்தப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கும், நடுப்பகல் 12 மணிக்கும் மாலை 4 மணிக்கும், இரவு 11 மணிக்கும் வெப்ப அளவு தவறாமல் குறிக்கப்பட்டது. அக் கணக்கு 24 ஆண்டுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டது. அவ்வாறு கணக்கிட்டதில் வெப்ப நிலையின் மேல் வரம்பு 82° க்கு மேல் சென்றதில்லை. கீழ் வரம்பு 60 1/2° க்குக் குறைந்ததில்லை. வெப்ப நிலையின் மேல் வரம்பிற்கும் கீழ் வரம்பிற்கும் உள்ள வேறுபாடு 21 1/2° க்கு மேல் எந்த ஆண்டிலும் இருந்ததில்லை. அநேகமாகக் கோடைக் காலங்களில் 80° க்கு மேல் வெப்பநிலை மிகுவது மிக மிகக் குறைவு. அநேகமாகக் கோடை நாட்களில் (ஏப்ரல், மே) 77° தான் இருப்பது வழக்கம். குளிர் காலங்களில் (டிசம்பர்) வெப்ப நிலை 67° தான் இருப்பது வழக்கம். எப்பொழுதாவது ஓரிரு நாட்களில் வெப்பநிலை 64° க்கு வருவதுண்டு.

மழை :

சேர்வராயன் மலைகளின் மீது பெய்யும் மழை அங்கு வீசும் காற்றின் வேகத்தைப் பொருத்தது. காற்றின் வேகம் குறைவாக இருக்கும் மாதங்களில் மழை மிகுதியாகப் பெய்யும். காற்றின் வேகம் மிகுந்திருக்கும் மாதங்களில் மழையின் அளவு குறைந்து விடும். காற்றுதன் வேகத்தையிழந்து மீண்டும் புத்துயிர் பெறும் மாதங்களில் மழை அநேகமாக இருப்பதில்லை. அக்டோபரிலிருந்து மார்ச் வரை வடகிழக்குக் காற்று வீசும். ஏப்ரலில் காற்று தெற்கு நோக்கி வீசும். மேயிலிருந்து செப்டம்பர் வரை தென் கிழக்குப் பக்கமாகவோ அல்லது தென்மேற்குப் பக்கமாகவோ வீசும். ஃபெப்ருவரி, மார்ச் மாதங்களில் காற்றின் வேகம் மிகுந்திருக்கும். ஏப்ரலில் காற்றின் வேகம் சிறிது குறையும். மே மாதத்தில் காற்றின் வேகம் திடீரென்று குறைந்து ஜூனில் மறுபடியும் உயர்ந்துவிடும்.