பக்கம்:தமிழின எழுச்சி.pdf/143

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

142 - தமிழின எழுச்சி

ஓர் இனப்பேரரசர்! அந்த வகையில் அவர் வகுத்தல் தவற்றை ஏனோ செய்து, இந்த இனத்தின் மீட்சிக்குப் பெரும் பயன் விளையாமல் போன ஒரு பெரும் பிழையைச் செய்துவிட்டார். எனவே அவர் காலத்திலேயே விளைந்திருக்க வேண்டிய விளைவு, பின்தள்ளிப் போவதுமட்டுமன்றி, பின்னிறக்கம் கொள்ளவும் வேண்டியதாயிற்று. அவரின் தலையாய கோட்பாடுகள் என்று நாம் உணர்ந்தவை மூன்று. அவை பகுத்தறிவு, சாதிமத வொழிப்பு, தமிழ்நாட்டு விடுதலை. இவற்றுள்ளும் தலையாய கொள்கை தமிழ்நாட்டு விடுதலையே! இக் கொள்கை வெற்றி பெறுமானால், மற்ற இரண்டு கொள்கைகளும் செயற்படுத்தப் பெறுவது, மிகவும் எளிதாகப் போய்விடும்.

மேலும் இந்தக் கொள்கையைப் பெரியார்போலும் ஒரு துணிவான, தன்னலமற்ற தலைவரால்தான் கட்டாயம் செயற்படுத்த முடியும். அவர் மறைவதற்கு ஓர் ஐந்தாறு மாதங்களுக்குமுன், அவரை நான் திருச்சியில் பார்த்து, 'தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை இன்னும் தள்ளிப்போட்டுக்கொண்டு போவது அவ்வளவு நல்லதன்று; உணர்வேறிய மக்கள் உணர்வு குன்றிப் போய்விடுவரே; எனவே விரைந்து அப்போராட்டம் தொடங்கப் பெறுதல் வேண்டும். போராட்டத்தை ஐயா தொடங்கிவிட்டால் போதுமானது. பிறகு தானே வலுப்பெற்று விடும். ஒன்றால், ஐயா அவர்கள் தொடங்கட்டும்; நாங்களெல்லாம் தொண்டருக்குத் தொண்டராய் இருந்து செயல்படுகிறோம். இல்லையானால் நாங்கள் தொடங்குகிறோம்; ஐயா எங்களுக்கு வாழ்த்துக் கொடுத்து வழி காட்டட்டும்' என்று நேரிடையாகவே கேட்டேன். அதை மகிழ்ச்சியோடும் அக்கறையோடும் கேட்டுக் கொண்டிருந்த பெரியார் அவர்கள், தாம் சென்னைக்குப் போனதும் விரைவில் போராட்டத்திற்கான நாள் குறிப்பதாகவும், அப்பொழுது அங்கு வந்து நான் கலந்து கொள்ளவேண்டுமென்றும் கூறினார்கள், அத்துடன் பக்கத்திலிருந்த மானமிகு வீரமணி அவர்களிடம், என் பெயரைக் குறித்துக் கொள்ளும்படியும் சொன்னார்கள். (திரு. வீரமணிக்கு இது நினைவிருக்குமோ என்னவோ?)

இந்நிகழ்ச்சியையும் இதையொட்டிய செய்தியையும் எதற்காக இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், காலம் இனி போகப்போக நமக்கு இசைவாக இருக்கும் என்று கூறமுடியாது. வடநாட்டவர்கள், குறிப்பாக இந்திரா பேராயக்கட்சியினர் இந்தியா முழுமையையும், தங்கள் முற்றாளுமை அதிகாரத்தின்கீழ்க் கொண்டுவரப் பெருமுயற்சி எடுத்துவருகிறார்கள். நாம் அஞ்சுவதற்கு ஒன்றுமே இல்லாத நெருக்கடி நிலைக்காலத்திலேயே; கையில் தூக்கித் தோள்மேல் வைத்திருந்த தமிழ்நாட்டுக்