பக்கம்:தமிழின எழுச்சி.pdf/50

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 49

யிருக்கின்ற மிகச் சிறந்த பேராற்றல்! அந்தப் பேராற்றலிலே முங்கி யெழுந்த ஓர் உணர்வு உண்மையான வரலாற்றைக்காண உதவியது. அப்படிப்பட்ட அந்த நிலையிலே இருந்து எழுதப்பட்ட இந்த நூல் எப்படிப்பட்ட சிறப்புடையது என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் ஒன்று உண்டு. அதனால் அதை அத்துடன் நிறுத்திக் கொண்டு இதை மிகச் சிறந்த உரையாகப் பேணிக் காக்கவேண்டும்; ஆனால் - அதற்காக அறிவைத் தடை செய்துகொள்ள வேண்டுமென்று நான் சொல்லவில்லை; எல்லா நிலைகளையும் நீங்களே உணர்ந்தீர்களே யானால், அவர் எல்லா உறுப்புகளுக்கும் மருத்துவம் செய்கின்ற அந்த மருத்துவர் போல், காதுவலிக்கு மட்டுமன்று; கண்களுக்கு மட்டுமன்று; வயிற்று வலிக்கு மட்டுமன்று; எல்லா நோய்களுக்குமே மருத்துவம் செய்கின்ற மருத்துவர்போல் - மாந்த வரலாறு, மொழி வரலாறு, இன வரலாறு, நில வரலாறு, இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, இலக்கிய அறிவு, இலக்கண அறிவு, வரலாற்று அறிவு எல்லா நிலைகளையுமே உணர்ந்து சமய அறிவு, இத்தனையும் உள்ளடக்கிச் செய்ததனால்தான் உண்மைகள் சிலவற்றைத் துணிந்து சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களுக்குள் எல்லை வைத்துக்கொள்ள வில்லை; அதைத் தாண்டிப்போக வேண்டியிருக்கின்றது. அதனால் நீங்களெல்லாரும் நான் அவரை அவர் முன்னிலையிலேயே பாராட்டி அவர் மகிழும்படி சொல்லுகிறேனென்று எண்ண வேண்டா. அதேபோல் மற்ற பேராசிரியர்களும் அவர் முன்னே அவர்களைக் கொஞ்சமேனும் தாழ்த்திச் சொன்னதாகக் கருத வேண்டா. தமிழ் வளர்க்கவேண்டு மென்று உண்மையாக நீங்கள் விரும்புவீர்களானால், உண்மையான தமிழுணர்ச்சிக்கு என்று மதிப்புக் கொடுக்கிறீர்களோ அன்றிலிருந்துதான் தமிழ் வளரத் தொடங்கும்; இல்லையானால் முகமன் பாராட்டுகின்ற அந்நிலை என்றுவரை இருக்கின்றதோ, அன்றுவரை தமிழ் வீழ்ந்துதான் கிடக்க வேண்டும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டியதில்லை.

இனி, திருக்குறளைப் பற்றி இன்னோர் உண்மையைச் சொல்ல விரும்புகின்றேன். திருக்குறள் வேறு வடமொழி நூல்களிலிருந்து (இன்னும் ஐந்தே ஐந்து நிமையங்களில் முடித்து விடுகிறேன்) நூலைப் பார்த்து எழுதப்பட்ட கருத்து-நூல் என்று எவ்வளவோ சொல்லப்பட் டிருக்கிறது. உங்களுக்கு ஒன்றே ஒன்றைமட்டும் - இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறேன். அறத்துப் பாலை மநுதர்மம், சுக்கிர நீதி ஆகிய இரண்டையும் பார்த்து எழுதியதாகச் சொல்லுகிறார்கள். பொருட்பால் அர்த்த சாத்திரம், காமாந்தகம் என்று ஒரு நூல் - அதாவது காமாந்தகர் என்று ஒரு முனிவர் அவர் பொருட்பாலைப் பற்றி மிகச் சிறந்த நூல் ஒன்று வடமொழியிலே