பக்கம்:தமிழின எழுச்சி.pdf/83

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82 - தமிழின எழுச்சி

இயக்கமாக ஆகிவிடும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்பதே அது. இந்நிலை ஓரின முன்னேற்றத்தின் முடிநிலையன்று. ஓரின அழிவின் முடிநிலையாகும். ஆழ்ந்த மாந்தவியல் அறிவுள்ள இன முன்னோடிகள் இந்தக் கருத்தின் ஆழத்தை நன்கு ஆய்ந்து விளங்கிக் கொள்ள வேண்டுகின்றோம்.

இக்கால், நம் தமிழர்களுக்கென்று இயங்கப் புறப்பட்டிருக்கும் இயக்கங்கள் சில தாறுமாறான கொள்கையமைப்புகள் கொண்டவை; அவற்றைத் தனித்தனியே இங்கு ஆய்ந்து சுட்டி, அவை மேலும் மேலும், அறிவுக் காழ்ப்பும் கொள்கை முரணும் கொண்டு, தங்கள் பிறவி நிலைகளை இழிவுபடுத்திக்கொள்ள முற்படுகின்ற நிலையினை, நாம் விரும்பவில்லை. ஆனாலும், அவைதாமே தம் இயலாமைகளையும் தகுதி இன்மைகளையும், உணர்ந்து தெளிந்து, தமிழின முன்னேற்றத் துக்கே ஊழ்த்த ஆணிவேர் எதுவென அறிந்து தேர்ந்து, அதற்குப் பக்க வேர்களாகத் தங்களை ஆக்கிக்கொண்டு, இயங்க முற்படுதல் வேண்டும் என்பதே நம் தலையாய விருப்பமும் வேண்டுகோளுமாகும், இவ்வெண்ணத்தில் எவ்வகையான முனைப்போ, முரணோ, புகழ் அங்காப்போ, பொருள் நசையோ, பொறுப்புப் போட்டியோ, தலைமைப் பித்தமோ ஓர் எள் மூக்கத்துணையும் இல்லையென்பதை எதிர்காலம் நிலைநிறுத்தும். ஓர் இயக்க வண்டி எத்திசையில், எப்பாதையில், எந்த வேகத்தில் இயங்க வேண்டுமென்பதைத் தேர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்கே இக்கருத்துகள் இங்கு ஆயப்பெறுகின்றனவே யன்றி, அவ்வண்டியில் எவரெவர் முன் அமர்தல் வேண்டும் என்பதற்கோ, எவரெவர்கள் பக்கவாட்டில் அமர்தல் வேண்டுமென்பதற்கோ, எவரெவர் பின்அமர்தல் வேண்டும் என்பதற்கோ அன்று என்பதை முதற்கண் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுகின்றோம். மற்று, ஓர் இயக்கப் புலத்தில், குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் மனவுணர்ச்சிகளையும், வினையெழுச்சிகளையும் நாம் நன்கு அறிவோம். அவ்எதிர் நிலைகள் என்றும் உதிரி நிலைகளே ஆகும். எனவே இனி, இங்கு. எடுத்துக் கூறப்படும் கருத்து நிலைகளுக்கு அனைவரும் செவிசாய்த்து, அவற்றின் அறிவுப் புலத்தில் கண்ணூன்றக் கேட்டுக்கொள்கின்றோம்.

இனி, ஓர் இயக்கக் கோட்பாட்டில் அடுத்தடுத்து வந்துறும் புற நிலை வேறுபாடுகளைப் படிப்படியாக ஆராய்ந்து தெளிவோம்.

பொதுவாக, நம்மிடையே காணப்பெறும் இயக்கவெழுச்சிகளில் கருத்துவேறுபாடுகளால் தோன்றும் கிளை நெகிழ்ச்சிகளையும், உதிரி நிலைகளையும் முன்னர்க் கண்டோம். இனி, அவற்றையடுத்துப் பொருள் நசையால் திரிபுறும் மனவேறுபாடுகளையும், அவற்றால் தோன்றும் இயக்கப் பிதுக்கல்களையும் இங்குக் காண்போம். இவ்வுலகத்