பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

பூர்வமான செய்திகளைக் கூறுவதாகச் சொல்ல முடியவில்லை. இஸ்லாத்தை ஆழமாக அறியாது, மேற்போக்காக அறிந்து கூறுவது போன்ற மன உணர்வே ஏற்படுகின்றது. அதே சமயத்தில் இந்து மதச் சமபவங்களை ஓரளவு நன்குணர்ந்தவர் போன்று, சம்பவங்களையும் கருத்துக்களையும் சுட்டிச் செல்வதை ஒப்பிட்டு நோக்கும் போது. இந்நூலாசிரியர் இந்தவாக இருந்து இஸ்லாமியத்தைத் தழுவி தானறிந்த, இஸ்லாமிய உணர்வையும் சிந்தனையையும் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டவராக இருக்கலாம் அல்லது இந்து சமய இலக்கியங்களில் பெற்ற அளவுக்குப் பயிற்சி இஸ்லாமிய நூல்களிலோ இலக்கியப் படைப்புகளிலோ இல்லாமலிருக்கலாம்.

இந்நூலின் வாயிலாக மற்றுமோர் உண்மையும் புலனாகின்றது. இஸ்லாம் எவ்வாறு மக்களிடையே பரவியது என்பதற்கு இந்நாடகப் போக்கும் அமைப்புமே தகக சான்றாகும். 'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது' என்ற வாதம் பொய்யானது; ஆதாரமற்றது என்பது எல்லா வகையிலும் எண்பிக்கப்படுகிறது தெரிந்தோ தெரியாமலே தீங்கான வாழ்வை மேற்கொள்வோர் உய்யும் வழியாக இறைநெறியாகிய இஸ்லாமிய நெறி அமைந்துள்ளது என்பதை பாதிப்புக்கு ஆளாகி அவதியுற்று தீன் நெறி திரும்பியோர் அனுபவப்பூர்வமாகக் கூறும்போது, மக்களிடையே ஏற்படும் மனமாற்றமே அவர்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவந்தது என்பதற்கு நொண்டியின் அனுபவம் கூறும் நொண்டி நாடகமே தக்க சான்று. கடந்த காலத்தில் இவ்வகைப் பணியை அமைதியாகவும் அழுத்தமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் ஆற்றி வந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மதினா பள்ளியில் இறைமன்னிப்பையும் இறையருளையும் வேண்டி மன்றாடிய நொண்டி தூங்கி விழித்தபோது, வெட்டுண்ட காலும் கையும் மீண்டும் வளர்ந்தன எனக் கூறும் நிகழ்ச்சி இயற்கை கடந்த செயலாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.