பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய இலக்கியப் புலவர்களாக இருந்தபோதிலும் இலக்கியம் என்ற அளவில் பிற சமய இலக்கியங்களை வெறுத்தொதுக்காது அவற்றையெல்லாம் குறைவறக் கற்றறிந்துள்ளார்கள் என்பதை இந்து சமயக் கடவுளர்கள், வீரர்கள், சிறப்புக்குரிய பெண் பாலர்களைப பற்றியெல்லாம் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வதன் மூலம் அறிந்துணர முடிகிறது. தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டியல்புகள், மரபுச் செயல்களெல்லாம் கூட இத்திருமண வாழ்த்து நூலிலே சுட்டிக்காட்டப்படுகின்றன. இவையெல்லாம் இவ்விரு பெரும் சமயத்தாரிடையே நிலவிய இணக்கமான போக்கையும் ஒற்றுமைத் தன்மையையும் உணர்த்துவனவாக உள்ளன.

இந்நூலைப் பின்பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிறபகுதியில் வாழ்ந்த அல்லாப் பிச்சைப் புலவர் என்பார் 'கதீஜா நாயகி திருமண வாழ்த்து' என்ற நூலையும் 'பாத்திமா நாயகி திருமண வாழ்த்து' என்ற நூலையும் பாடியளித்துள்ளார். இந்நூல்கள் இரண்டும் முன்பெல்லாம் சாதாரணமாக முஸ்லிம்களின் வீட்டுத் திருமணங்களில் பெண்களால் இசையோடு பாடப்பட்டு வந்துளளன. இதுபோன்றே இலங்கையிலும் 'மண மங்கல மாலை' என்ற நூல் முஸ்லிம் புலவர் ஒருவரால் பாடப்பட்டு இஸ்லாமியர் இல்லங்களில் இசையோடு பாடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

'நொண்டி நாடக' வகை போன்றே இத்திருமண வாழ்த்து இலக்கிய வடிவத்தை அடியொற்றி முஸ்லிமல்லாத இந்து சமயப் புலவரான 'மாடசாமி' ஆசாரியார் எனும் துறவியாரால் நூதன கல்யாணப் பாட்டு என்ற நூல் வெளிவந்தது. திருமண வாழ்த்து முறையைப் பின்பற்றி முஸ்லிமல்லாதாரால் பாடப்பட்ட ஒரே நூல் இதுதான்.