பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரபுத் தமிழ்

தமிழக முஸ்லிம் மக்களாலும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களாலும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே 'அரபுத் தமிழ்’ என்பதாகும். அரபி மொழி எழுத்துருவில் (லிபி) தமிழை எழுதுவதே 'அரபுத்தமிழ்' ஆகும்.

உலக மொழிகளிலேயே மிக நீண்ட காலப் பழமையுடைய மொழிகளாகத் தமிழும் அரபி மொழியும் வழங்கி வருகின்றன. இம்மொழிகளைப் போன்றே இரண்டு மொழிகளைப் பேசும் மக்கட் பகுதியினரும் நீண்ட காலத் தொடர்புடையவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே தமிழகமும் அரபகமும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. சீனம், கிரேக்கம், ரோம போன்ற பகுதிகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது போன்றே அரபு மொழி பேசும் பகுதியான 'மிஸ்ரு' என அழைக்கப்பட்ட எகிப்தியப் பகுதியோடும் தமிழ் மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இதனை பாரதியார்

"சீனம் மிசிரம் யவனரகம்-இன்னும்
      தேசம்பலவும் புகழ்விசக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்
      நன்று வளர்த்த தமிழ்நாடு"

எனப் பாடி மகிழ்கிறார். 'மிஸ்ரு' என்பது தமிழில் 'மிசிரம்’ என மறுவி வந்துள்ளது.

அதே போன்று அரபு நாட்டு வணிகர்களும் மேலைக் கடல் வழியாகவும் கீழைக் கடல்வழியாகவும் தமிழகப்பகுதி-