பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நடந்ததாகக் கூறி, பசியாலும் களைப்பாலும், நடக்க இயலாமையாலும் அம்மூவரும் கடுஞ்சுரத்தில் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் களைத்து வீழ்ந்த, பசி மிகுந்த பெற்றோரை இருதோளிலும் தாக்கிச் சென்று பணிவிடையாற்றிய உத்தமச் செல்வனாகிய, அப்பாஸின் அருங் குணச் சிறப்பை சிந்தைகொள் மொழியில் செப்பிவிடுகின்றார் ஆசிரியர்.

நூறு மசலா நூலின் கதாநாயகியான மெஹர் பானுவை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் பாங்கு சிறப்பாயுள்ளது. தன் பெற்றோருடன் பகுவீறு நாட்டை அடைந்த அப்பாஸ் அங்குள்ள கிழவி ஒருத்தியின் துணையைப் பெறுகின்றான். அக்கிழவி மூலம் மெஹர்பானுவை அறிமுகப்படுத்தும் ஆசிரியர்.

'இந்தவூரின் அதிசயந்தான் அம்மேயென்ன

வென அவள் மொழிந்தாள்

உந்துபகு வீரரசன் மகள் ஒருத்தியுண்டு

அவளோ வென்றால்,

சந்திரனை உருவமைத்து நாயன்தரணி

யிலே விடுக்க

வந்த பெண்ணோ அல்லகு வானிலுள்ள

மங்கையரில் ஒருத்தியோ

தெரிந்திலனே அவளழகை நான் தான்

செப்புவதெப்படி மகனே

பரிந்து சொல்லவொரு நிகருமிந்தப்

பாரிலவட்கில்லை மன்னர்’

எனக்கூறி மெஹர்பானுவின் அதியற்புத அழகைவர்ணித்து அப்பாஸுக்கு மட்டுமல்லாது நமககே அவளை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையை எழுப்பி விடுகிறார் நூலாசிரியர்.

அவளது விந்தை செறி எழிலை அழகு ஒவியமாகச் சொற் சித்திரம் தீட்டிக்காட்டிய ஆசிரியர் அடுத்து அவளது நோக்கங்களை எடுத்துக் கூறுகிறார்.