பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

தொங்கல் செய்யுள் அமைப்பு எத்தகையது என்பதையும் ஆசிரியரே, "அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தையே தொங்கல் என வழங்குவர்" என விளக்கிக் கூறியுள்ளார்.

இருநூறு தொங்கல் பாக்களைக் கொண்ட நூறு நாமா நூலின் இறுதிப் பகுதி இன்னிசைப் பாடல்களையும் கொண்டு விளங்குகிறது.

மற்றொரு புகழ்பெற்ற நாமா இலக்கிய நூல் ஐயம் பேட்டை மதாறு சாஹிபு அவர்களால் இயற்றப்பட்ட 'மிஃறாஜ் நாமா'வாகும். நபிகள் நாயகமவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் உறுதுணையோடு விண்ணேற்றம் பெற்று இறைச் சந்நிதானத்தை அடைந்து திரும்பிய வரலாற்றை விரித்துரைப்பதாகும் 'மிஃறாஜ் நாமா.'

விண்ணேற்றம் பெறும் பெருமானாரை ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்திஸ் எனும் இறையில்லத் தலத்திற்கு வானவர் கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்துச் சென்றார். மேலுலகங்கள் வழியாக இறைச் சந்நிதானத்தை அடைய வேண்டும். விண்ணேகு முன் தொழுகை நடைபெற்றது. வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) பாங்கு சொல்ல, பெருமானார் தொழுகை நடத்தினார்கள். இதனை ஆசிரியர்,

"வானின் ஜிபுரீல் வாங்கு சொல்ல
      வரிசை நபியுல்லா பிரத்தி சொன்னார்
மூன்றுநூறுடன் பதிமூன்றான
     முறுசலீன்களும் மற்றுமுள்ள
ஆண்வொருலட்சத் திருபத்துநா
     லாயிரச் சின்ன நபிமார்கள்
தீனோங்கிடச் செய்து அன்பியர்களும்
     சிறந்த ஒலிகளும் இருக்கக் கண்டார்."

எனக் கூறுகிறார்.