பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தமிழ்நாடும் மொழியும்


கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் போந்த நோபிலிப் பாதிரிக்கு ஆதரவு காட்டிய தெலுங்கு மன்னர்கள் மூன்றாம் கிருட்டினப்ப நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன், செலபதி நாயக்கன் முதலியோராவர்.

மைசூர் மன்னர்கள்

மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய இடங்கள் மைசூருக்குச் சொந்தமாயின. சிக்கதேவன் என்பவன் அடுத்து அரசனாயினான். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, பழனி, ஆனைமலை, குமாரபாளையம், தவளகிரி, பொள்ளாச்சி முதலிய இடங்கள் இவனுக்குச் சொந்தமாயின, மேலும் சங்கரய்யா. என்பவன் கொங்கு நாட்டில் ஆட்சி நடத்த மன்னனால் அனுப்பப்பட்டான். இது நடந்த காலம் 18-ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாகும். இவன் அவினாசி, பவானி இவ்விடங்களிலுள்ள கோவில்களைப் புதுப்பித்தான்; பேரூரில் குளமொன்று வெட்டினான். இவன் காலத்திலேயே மைசூர் மன்னர்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குறையலாயிற்று. ஆனால் கி. பி. 1765-இல் மைசூர் மன்னனாக முடிபுனைந்து கொண்ட ஐதர் அலி, அவன் மகன் திப்பு இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டின் பெரும்பகுதி. அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.