பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ்ப் பழமொழிகள்


கடிதான சொல் அடியிலும் வலிது.

(பெரிது.)

கடிதான பிள்ளை பெற்றோருக்கு உதவுமா?

கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

கடி நாய் எலும்புக்குப் பறந்தாற் போல.

கடிப்பதற்கு ஓர் எலும்பும் இல்லை; காதில் மினுக்க ஓலையும் இல்லை. 6570


கடிய மாட்டுக்குக் கம்பு உடையும், கொடிய மாட்டுக்குக் கொம்பு உடையும்.

கடியாத மூட்டை என்று விட்டு விடுவார்களா?

கடியும் சுருக்குத்தான்; அடியும் சுருக்குத்தான்.

கடிவாளம் இல்லாத குதிரை போல.

கடுக்கன் இட்ட நேற்றுக்குள் காது அறுந்த சுருக்கு. 6575


கடுக்கன் ஜோடியும் காளைமாட்டு ஜோடியும் அமைவது கடினம்.

கடுக்காய்க்கு அகணி நஞ்சு: சுக்கிற்குப் புறணி நஞ்சு.

கடுகிலும் கால் திட்டம் கரண்டி; அதிலும் கால் முட்டை எண்ணெய் கடன் வாங்கி என் தலை சீவிக் கட்டி, மகள் தலை வாரிக் கட்டி, மருமகன் தலை கோதிக் கட்டி, குறை எண்ணெய் வைத்த இடத்தில் அயல் வீட்டுக்காரி வந்து இடறி விட்டாள் ; அது ஏரி பெருகினாற் போலப் போயிற்று.

(என்றாள்.)

கடுகிற்று, முடுகிற்று, வடுகச்சி கல்யாணம்.

கடுகு அத்தனை நெருப்பு ஆனாலும் போரைக் கொளுத்தி விடும். 6580


கடுகு அளவும் களவுதான்; கர்ப்பூரக் களவும் களவுதான்.

(கடுகு அளவு எடுத்தாலும், கற்பூரம் எடுத்தாலும்.)

கடுகு சிந்தினால் கலகம் வரும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

(போகுமா?)

கடுகு செத்தாலும் கறுப்புப் போகாது.

கடுகு செத்தும் காரம் போகாது. 6585

(செங்கற்பட்டு வழக்கு.)


கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக் கொண்டு திரிவான்; பூசணிக்காய் போவது தெரியாது.