பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

மக்சீம் கார்க்கி


அவள் தொழிற்சாலைக்குள் பிரசுரங்களைக் கொண்டு சென்ற விவரத்தைக் கொஞ்சம் மூக்கும் முழியும் வைத்துச் சொல்ல முனைந்தாள். எனினும் அவளது ஆனந்தத்தாலும், ஆர்வத்தாலும் சொல்லுக்கு வளையாமல் அடிக்கடித் தடுமாறிக் குழறியது நாக்கு.

முதலில் அவன் தன் கண்களை வியப்போடு அகல விரித்தவாறே இருந்தான். பிறகு வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தான்.

“ஓஹோ!” என்று ஆனந்த மிகுதியினால் கத்தினான். “நீங்கள் செய்ததும் நல்ல காரியம்தான். இது விளையாட்டல்ல. பாவெல் கூடச் சந்தோஷப்படுவான், அம்மா, நீங்கள் செய்த வேலை எவ்வளவு பிரமாதம் தெரியுமா? பாவெலுக்கும் அவன் தோழர்களுக்கும் அது ரொம்ப உதவும்!”

அவளது உடம்பு முழுவதுமே முன்னும் பின்னும் அசைந்து குலுங்கியது. அவன் தன் விரல்களை முறித்துச் சொடுக்குவிட்டான்; உற்சாகத்தால் புளகாங்கிதம் அடைந்து சீட்டியடித்தான். அவனது உவகையைக் கண்ட தாய்க்கு இன்னும் பேச வேண்டும் என்ற ஆசை உந்தியெழுந்தது.

“என் அருமை அந்திரியூஷா!” என்று ஆரம்பித்தாள் அவள். அவளது இதயமே திறந்துகொண்டதுபோல், திறந்த இதயத்திலிருந்து பரிபூரண உவகையோடு முன்னிட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் மளமளவென்று பொழிந்து வழியப்போவதுபோலத் தோன்றியது. “நான் என் வாழ்வையே நினைத்துப் பார்த்தால்—அட, ஏசுவே! நான் எதற்காகத்தான் உயிர் வாழ்ந்தேனோ, தெரியவில்லை, ஓயாத வேலை.... பயத்தைத் தவிர வேறு எதையுமே நான் அறிந்ததில்லை. ஓயாது உதை, அடி... என் புருஷனைத் தவிர வேறு யாரையுமே நான் கண்டதில்லை! பாவெல் எப்படி வளர்ந்தான் என்பது கூட எனக்குத் தெரியாது. என் புருஷன் உயிரோடிருந்தபோது, நான் பாவெலை நேசித்தேனோ, நேசிக்கவில்லையோ என்பதும் எனக்குத் தெரியாது. என் சிந்தனைகள் என் கவலைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்—என்னைக் கட்டிக்கொண்ட மிருகத்துக்கு இரை போடுவதும், உடனடியாக அவன் சௌகரியத்தைக் கவனிப்பதும்தான் என் கவலை. அப்படிக் கவனிக்காது மெத்தனமாக இருந்தால் அவன் கோபங்கொண்டு என்னைப் பயமுறுத்துவானே, அடிப்பானே என்ற பயத்தால், அந்த அடிக்கு ஆளாகாமல் ஒரு நாளாவது தப்பி வாழ வேண்டுமே என்ற கவலையால் தான் நான் அப்படி வாழ்ந்தேன். ஆனால் அவன் என்னை அடிக்காத நாளே கிடையாது. அவன் என்னை அடித்து உதைக்கும்போது தன் மனைவியை அடிப்பதாக அவன்