பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

மக்சீம் கார்க்கி


சீமான்கள் புத்தகங்களை எழுதி அதை வெளியே பரப்பிவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் எழுதிய புத்தகங்களோ சீமான்களுக்கு எதிராக இருக்கின்றன. நீயே இதை யோசித்து எனக்கு விளக்கிச் சொல்லு. அவர்கள் எதற்காகத் தங்கள் பணத்தைப் பாழாக்கிப் புத்தகம் எழுத வேண்டும்? அந்தப் புத்தகங்களைக்கொண்டு சாதாரண மக்களைத் தங்களுக்கு எதிராகவே ஏன் தூண்டிவிட வேண்டும்? இல்லையா?”

தாய் படபடவென்று இமைகொட்டி பயந்து போய்க் கூச்சலிட்டாள்:

“நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

“ஆஹா!” என்று கூறியவாறு அவன் ஒரு கரடியைப் போலத் திரும்பி உட்கார்ந்தான். “அப்படிச் சொல்லு நானும், உன்னைப் போலத்தான், இந்த நினைப்பு என் மனதில் பட்டதோ இல்லையோ, உடனே என் உடம்பெல்லாம் குளிர்ந்து போயிற்று! ஆமாம்.”

“ நீ என்ன, ஏதாவது புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறாயா?”

“ஆமாம். வெறும் ஏமாற்று!” என்றான் ரீபின். “தம்மையெல்லாம் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நான் உணர்கிறேன். எனக்கு ஒன்றும் விவரம் தெரியாது. என்றாலும், இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை! துரோகச் செயல்! அதுதான் சங்கதி! என்னுடைய படித்த சீமான்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். ஆனால் நானோ உண்மையைத்தான் நாடுகிறேன். இப்போது தான் எனக்கு உண்மை புரிந்தது. இனி நான் இந்தச் சீமான்களைப் பின்பற்றவே மாட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இவர்கள் என்னைக் கீழே தள்ளி, என் எலும்புகளை ஒரு பாலம் மாதிரி உபயோகித்து அதன் மீது நடந்து சென்றுவிடுவார்கள்....”

அவனது வார்த்தைகள் தாயின் உள்ளத்தை ஒரு பாப சிந்தையைப் போல் பற்றிப் பிடித்தது.

“அட கடவுளே!” என்று வருத்தத்தோடு சொன்னாள் அவள். “பாஷாவுக்குக் கூடவா இது புரியாமல் போயிற்று! மற்றவர்கள் எல்லோருக்கும் கூடவா.....”

அவளது கண் முன்னால் : உறுதியும் நேர்மையும் நிறைந்த முகங்கள்—இகோர், நிகலாய் இலானவிச், சாஷா முதலியோரின் முகங்கள் தோன்றி மறைந்தன, அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“இல்லையில்லை” என்று தலையைக் குலுக்கிக்கொண்டே சொன்னாள் அவள். “என்னால் இதை நம்பமுடியாது! அவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள்!"