பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

மக்சீம் கார்க்கி


“நீ எளக்கு எந்தச் சமாதானமும் சொல்ல முடியாது’ என்று நிகலாய் மெதுவாகச் சொன்னான், “என் இதயம் ஓநாயைப்போல் உறுமி ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது.”

“நான் உனக்கு எதுவுமே சொல்ல விரும்பவில்லை என்றாலும் உன்னுடைய இந்தச் சஞ்சலம் போய்விடும்: பரிபூரணமாகப் போகாவிட்டாலும். ஓரளவாவது போய்விடும் என்பதுமட்டும் எனக்குத் தெரியும்’

அவன் லேசாகச் சிரித்தான்; பிறகு நிகலாயின் தோள்பட்டைமீது தட்டிக் கொடுத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.

“இது இருக்கிறதே, இது ஒரு குழந்தை நோய் மாதிரி: மணல்வாரி நோய் மாதிரி. நம் எல்லோருக்குமே இந்த நோய் என்றாவது ஒரு நாள் வந்துதான் தீரும். பலமுள்ளவனை அது அவ்வளவாகப் பாதிக்காது; பலமில்லாதவர்களை மோசமாகவும் பாதிக்கக்கூடும். இந்த நோய் எப்போது பற்றும் தெரியுமா? நம்மை நாமே உணர்ந்துகொள்ள முனையும் சமயம் பார்த்து, எனினும் வாழ்க்கையைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்ளாமல், அதில் நமக்குரிய இடத்தை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற குறைப்பக்குவ சமயம் பார்த்து, நம்மை வந்து பற்றிக்கொண்டுவிடும். நீதான் உலகத்திலேயே உயர்ந்த ரகச் சரக்கு. என்றும். எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத்தோன்றும். ஆனால் கொஞ்ச காலம் போனால், எல்லோருடைய இதயங்களும் உன் இதயத்தைப் போலவேதான் இருக்கின்றன. -என்ற உண்மையை நீ உணர்ந்துகொள்வாய். உணர்ந்த பின்னர் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும். கூப்பிடு தூரத்துக்குக்கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியிலே கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உன் அறியாமையைக் கண்டு நீயே நாணம்அடைவாய். உனது மணியை போன்ற பல்வேறு சிறுமணிகளின் சம்மேளனத்தோடுதான் உனது மணியோசையும் ஒன்றுபட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ உணர்வாய். நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச்சட்டியில் விழுந்த ஈயைப் போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?”

“எனக்குப் புரியலாம்; ஆனால் நான் அதை நம்பத்தான் இல்லை’ என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய்.