பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

மக்சீம் கார்க்கி


போகும் வழியில் அவர்களை பிரோனல் நிறுத்தினான். அவன் ஒரு அடக்கமான மத்திம வயது ஆசாமி, அவனது நேர்மையும் நாணயமும் பொருந்திய வாழ்வினால் எல்லோரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தான்.

“நீங்கள் கூட வேலைக்குப் போகவில்லையா, தனீலோ இவானவிச்?’ என்று கேட்டான் பாவெல்.

“இல்லை, என் மனைவிக்கு இது பிரசவ நேரம். மேலும், எல்லோரும் இப்படி உற்சாகமாயிருக்கிற நாளிலே...” அவன் தனது தோழர்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டுத் தணிந்த குரலில் சொன்னான்:

“நீங்கள் இன்று தொழிற்சாலை மானேஜருக்கு ஏதோ தொந்தரவு கொடுக்கப் போவதாக, சில ஜன்னல்களை உடைத்தெறியப் போவதாக, பேச்சு நடமாடுகிறதே. உண்மைதானா?” என்று கேட்டான்.

“நாங்கள் ஒன்றும் குடிகாரர்களில்லையே!” என்றான் பாவெல்.

“நாங்கள் வெறுமனே தெருவழியே அணிவகுத்துச் செல்லுவோம். கொடிகளைத் தாங்கிக் கொண்டும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் செல்லத்தான் உத்தேசம்”என்றான் ஹஹோல். “நீங்கள் எங்கள் பாட்டுக்களைக் கேளுங்கள். அதுதான் எங்கள் நம்பிக்கையின், கொள்கையின் குரல்!”

“உங்கள் கொள்கையெல்லாம் எனக்குத் தெரியும்” என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னாள் மிரோனவ். “பிறகு நான்தான் எங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறேனே. ஆ! பெலகேயா நீலவ்னா! நீயுமா?’ என்று தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு சத்தமிட்டான், “நீயும் இந்தப் புரட்சியில் கலந்துவிட்டாய்?”

“சாவதற்கு முன்னால் நான் ஒரு முறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்லவேண்டும்!”

“அடிசக்கை! ஆனால், நீதான் தொழிற்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பிரசுரங்களைக் கொண்டு வந்தாய் என்று அவர்கள் சொல்லிக்கொள்வது உண்மை என்றுதான் தோன்றுகிறது.”

“யார் அப்படிச் சொன்னது?” என்று கேட்டான் பாவெல்.

“ஹூம். அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். சரி, நான் வருகிறேன். நீங்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்ளுங்கள்.”

தாய் அமைதியோடு புன்னகை புரிந்தாள். அவர்கள் தன்னைப்பற்றி, அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்பதைக் கேட்பதற்கு அவளுக்கு ஆனந்தமாயிருந்தது.