பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

மக்சீம் கார்க்கி


சொல்லாமலே தெரியும். அவள் நல்லவள். நமக்கெல்லாம் உதவி செய்ய எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய நிலைமைக்குக் குந்தகம் விளையாமல் உதவி செய்ய நினைக்கிறாள். ஆனால், சாதாரணமான பொது மக்களோ? அவர்கள் நேராகச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் ஆபத்தையோ கொடுமையையோ எண்ணி அஞ்சி ஒதுங்கவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததா? அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமே துன்பத்தைத்தான் பெறுகிறார்கள். என்ன செய்தாலும், அவர்கள் மனம் புண்படத்தான் செய்கிறது. அவர்களுக்கு திரும்பிச் செல்லுவதற்கு வேறு மார்க்கமே இல்லை. எந்தெந்தத் திசையிலே திரும்பினாலும் ‘நில்!’ என்ற குரல்தான் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.”

“எனக்குத் தெரிகிறது” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் ஸ்திபான். உடனேயே, “இவள் தனது டிரங்குப்பெட்டியை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாள்” என்றான்.

பியோத்தர் தாயை நோக்கி எதையோ புரிந்துகொண்ட பாவனையில் கண்ணைக் காட்டினான்.

“கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதலான குரலில் சொன்னான் அவன்; “எல்லாம் நல்லபடி நடக்கும், அம்மா. டிரங்குப்பெட்டி என் வீட்டில்தான் இருக்கிறது. நீங்களும் இந்த இயக்கத்தில் பங்கெடுக்கிறவள்தான் என்றும், அந்த அடிபட்ட மனிதனை உங்களுக்குத் தெரியும் என்றும் இன்று இவன் வந்து என்னிடம் சொன்னபோது நான் சொன்னேன்; ‘ஸ்திபான், நன்றாகக் கவனி’ என்றேன். ‘இந்த மாதிரி விஷயங்களில் தவறிவிடக்கூடாது பார்.’ நாங்கள் இருவரும் உங்கள் பக்கத்திலே நின்றுகொண்டிருந்தபோது நீங்களும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தீர்கள். நேர்மை குணமுள்ளவர்களை எந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால், அப்படிப்பட்டவர்கள் அநேகம் பேர் உலகில் இருக்க முடியாதல்லவா? சரி, நீங்கள் டிரங்குப்பெட்டியைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.......”

அவன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து கேட்கும் குறியுடன் அவளையே பார்த்தான். பிறகு கேட்டான்:

“அதற்குள் உள்ள பொருள்களை யாரிடமாவது தள்ளிவிட்டால் நல்லது என்று தோன்றினால், அந்த விஷயத்தில் நாங்கள் மனமகிழ்ச்சியோடு ஒத்துழைக்கத் தயார். அந்தப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும். நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே.”