பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/426

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

மக்சீம் கார்க்கி


"அவன் எனக்குச் சொந்தக்காரனில்லை தான். இருந்தாலும் அவனை நான் வெகு காலமாக அறிவேன். அவனை என் சகோதரனாகவே — அண்ணன் போலவே மதிக்கிறேன்.”

அவளது உணர்ச்சியை வெளியிட அவளுக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதைக் கண்டதும் அவளுக்கு ஆற்றொணாத் துயரம் நெஞ்சில் பெருகியது. மீண்டும் அவள் அமைதியாகக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள், அழுத்தமும் ஆர்வமும் நிறைந்த அமைதி அந்தக் குடிசையில் நிலவியது. பியோத்தர் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் குனிந்து நின்றான். ஸ்திபான் தன் முழங்கைகளை மேஜை மீது ஊன்றியவாறே உட்கார்ந்து மேஜையைப் பட படவென்று கொட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அடுப்பின் முன்னால் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் பார்வை தன் முகத்தின் மீதே நடமாடுகிறது என்பதைத் தாய் உணர்ந்துதானிருந்தாள். தாயும் சமயங்களில் அவளை ஒரு பார்வை பார்த்தாள். அவளது நீள் வட்டக் கரிய முகத்தின் நேரிய மூக்கும், கூர்மையான மோவாயும் அவள் கண்ணில் பதிந்தன. அவளது பசிய கண்களில் கூர்மையும் கவனமும் மிகுந்திருந்தன.

“அப்படியானால் அவன் உங்கள் நண்பன்தான்” என்று மெதுவாகச் சொன்னான் பியோத்தர், “அவன் தனக்கென ஒரு தனிக்குணம்படைத்த ஆசாமி. தன்னைப்பற்றி மிகவும் சரியாகவும் உயர்வாகவும் நினைக்கிறான். ஏ, தத்யானா, எப்படிப்பட்டவன் அவன்?”

“அவனுக்குக் கல்யாணமாகியிருக்கிறதா?” என்று தனது சிறிய வாயின் உதடுகளை இறுக மூடியவாறே குறுக்கிட்டுக் கேட்டாள் தத்யானா.

“அவன் மனைவி இறந்துவிட்டாள்” என்று துக்கத்தோடு சொன்னாள் தாய்.

“அதனால்தான் அவன் அத்தனை தைரியமாயிருக்கிறான்” என்று செழுமை நிறைந்த ஆழ்ந்த குரலில் சொன்னாள் தத்யானா; “குடும்பஸ்தன் என்றால் இந்த மாதிரி மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கவே மாட்டான், பயப்படுவான்.”

“ஏன், நானில்லையா?” என்று கத்தினான் பியோத்தர்; “நான் கிரகஸ்தன் இல்லையா?”

“அடடா......” என்று அவனது கண்களைப் பார்க்காமலே உதட்டைக் கோணிச் சிரித்துக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். “நீ என்ன செய்கிறாய்? என்னவோ பேசுகிறாய். சமயங்களில் ஏதோ ஒரு