பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—21—

தாழ்ந்தவர் என்பவர் கும்பிடுதற்குத்
தனிக் கோயில் காட்டுவதோ? - அவர்
வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ? 19

தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் - அவர்
வாழ்த்தி அழைக்கும் "சுதந்தரம்" தன்னை
மறித்திடும் நாசமக்கள் 20

தாழ்ந்தவருக்கும் உயர்ந்தவருக்கும் இத்
தாய்நிலம் சொந்தம் அன்றோ? - இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதி நன்றோ? 21

"தாழ்ந்தவர்" என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுந்ததுவோ? - எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ? 22

முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரே சமுகம் - என
ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பா விடில் என்ன சுகம்? 23