பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

திருக்குறள்



6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.

நல்ல நூல்களைக் கற்றறிந்ததனால் ஆகிய அறிவும், இயற்கையாக அமைந்துள்ள நுண்ணறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன்னே வந்து நிற்கக் கூடிய மிகவும் நுட்பமான சூழ்ச்சிகள் எவை இருக்கின்றன? எவையும் இல.

பிறரால் நிகழக்கூடிய எத்தகைய சூழ்ச்சிகளையும், அத்தகைய் அமைச்சர்கள் எளிதில் அறிந்து கொள்வர் என்பது பொருள். 636

7. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

செய்ய வேண்டுவன இவையே என்று நூலறிவாலும், நுண்ணறிவாலும் நன்கு தெரிந்து கொண்ட போதிலும் அந்த இடத்தின் நிலையையும், அறிந்து, அவைகளுக்கு ஏற்பவே செய்தல் வேண்டும்.

செயற்கை-செய்ய வேண்டிய கடமை; உலகத்து இயற்கை-உலக ஒழுக்கத்துக்கு ஏற்ற செயலுமாம். 637

8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்.

அறிந்து சொல்லுவோர் தம் சொற்களையும் இகழ்ந்து தானும் எண்ணிப் பாராது ஒருவன் ஒன்றைச் செய்பவனாக இருப்பினும், அவனுக்கு அருகே இருக்கும் அறிஞன் வாளா இராமல், உண்மைப் பொருளை விளக்கிக் கூறுதலே முறைமை ஆகும்.‘

'அறிகொன்று அறியான்’ என்பதற்கு அறிய வேண்டியவைகளுள் ஒன்றையும் அறியாதவன் என்றும் பொருள் கொள்ளுவர். உழையிருந்தான்-அருகே இருப்பவன். இங்கே அமைச்சனைக் குறிக்கும். 638

9. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

அரசனுக்கு அருகிலேயே இருந்து அவனுக்குத் தீங்கினை விளைவிக்கும் மந்திரியைக் காட்டிலும், அந்த அரசனை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கக் கூடிய எழுபது கோடிப் பகைவரே மேலானவர்கள்.

தெவ்-பகைவர்; உறுதல்-பொருந்துதல். 639