பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

அ - 2 - 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6


தலைநிமிர்ந்து காளைபோல் பெருமிதம் காட்டி நடைபோட முடியும் என்றார்.

3. ஏறுபோல் பீடு நடை: பொலிகாளை போல் வீறுமிக்க நிமிர்ந்த அசைவு நடை.

- பரிமேலழகரும் பிறர் அனைவரும் ஏறு என்பதற்கு ஆண் அரிமா (சிங்கம்) வையே உவமை காட்டியுள்ளனர். ஆனால், காட்டிலுள்ள அரிமா நடையினை நாட்டிலுள்ளார் அனைவரும் கண்டிருத்தல் அருமையாகனும், அவ்வாறு ஒரு சிலர் கண்டிருந்தாலும், அவர், அதன் பாய்ச்சல் நடையையே அச்சத்தால் கண்டிருப்பதன்றி, அது மென்னடையிட்டுத் திமிர்ந்து நடந்து வருதலை வியப்புடன் கண்டிக்க வாய்ப்பில்லையாகலானும், இங்குள்ள அனைவரும் பொலிந்து நிமிர்ந்த காளையின் திமிர்ந்த ஏற்ற நடையையே கண்டிருத்தல் இயலும் ஆகையினாலும், எல்லாரும் எளிதில் உணரத் தகும் பொருளையும் செயலையும் உவமை காட்டுதலே பெரும் புலவோர்க்கியல்பு ஆகலானும், ஈண்டுக் கூறப்பெற்றதும் அதுவேயாம் என்றுறுதியின் உரைக்க.

- பெண் விலங்கின்மேல் ஏறுதலான் ஆண் ஏறு எனப் பெற்றது.

4. இக்குறளின் மறுதலையாக, இகழ்புரிந்த இல்லுளோர்க்கு இல்லை புகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை' என்பதும் உணரத்தக்க தென்க.

5. இதன் வழி, தகைசான்ற சொல் காத்தல் பற்றிக் கவலுறாது, பிறர் இகழ்வைத் தேடிக்கொண்ட மனையாளால் கணவர்க்கும் குடும்பத் திற்கும் வரும் இழிவு கூறப்பெற்றது.


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
}} 60

பொருள் கோள்முறை : இயல்பு

பொழிப்புரை: (வாழ்க்கையை நன்கு உணர்ந்தவர்கள்), மனைவியின் பெருமைமிகு நல்ல குணங்களும் செயல்களும் என்றும் மகிழ்வையும் நன்மையையும் தரவல்லன என்று கூறுவர். அத்துடன் அம்மகிழ்ச்சிக்கும் நன்மைக்கும் அணிகலன் போல் அழகும் சிறப்பும் தருவது, அவள் பெறும் நல்ல மக்களது பெருமை என்றும் உரைப்பர்.