பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 103



"அப்படியா? நல்லது," என்று மொழிந்தார். ஆனந்தத்துக்குரிய திரைக் கடிதத்தை வாணியிடம் சமர்ப்பித்தார்.

அவள் ஆனந்தக் கடலாடினாள்!

"எல்லாம் உங்கள் திறமையின் அதிருஷ்டம்!"

"அப்படியா? பேஷ், பேஷ்! எல்லாம் நீ என் துணைவியாக வரப்போகிற அதிருஷ்டம் என்றல்லவா நினைத்தேன்!” என்று பதிலுரைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏன் அவளது அழகு முகம் அப்படிச் சிறுத்துக் கறுத்தது?"

இம்மாற்றத்தை அவர் கவனிக்கவில்லை. ஆனால், அவருடைய உள்மனம், வாணி தன் மனசுக்கு இனியவளான அந்த வரலாற்றை நினைந்து நினைந்து நெக்குருகியது. தன் அன்னையின் பாசத்தைக் கவர்ந்து விட்ட வாணி, பிறகு தம்மையும் ஈர்த்த தன்மையை எண்ணினார். அதற்குள், 'என்னை நீங்கள் காதலிக்கிறீர்களா?' என்று சுட்டித்தனமாகக் கடிதம் எழுதிக் கேட்டுவிட்ட அவளது அந்தரங்க சுத்தியான நேர்மைத் திறன் பாய்ச்சல் காட்டியது. அது முடிந்த கையுடன், "அம்மா, எனக்கு வாணியை நிரம்பவும் பிடித்து விட்டது!" என்று முத்தாய்ப்பு வைத்த பவித்திரத்தையும் நினைவில் கொண்டார்.

"வைகாசி முடிந்தால் எங்கள் திருமணமும் முடிந்து விடும்!" என்ற நினைவு முல்லைக் கொடியாக மனப்பந்தலில் படர்ந்தது. மணப்பந்தர் காட்சி தர, முல்லை மனம் சுகந்தம் வீச, மனமோகனக் கனவின் கதாநாயகியாக வாணி விளையாட, காலம் கரைந்தது.

அழைப்புக்கள் அச்சிடக் கொடுக்க அடுத்த வாரம் நல்ல நாளாம்!-வாணி தெரிவித்தாள்.