பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 57


இரவின் விழிப்பில் மின்விளக்குகள் விழித்திருந்தன. பூஞ்செடிகள் இளந்தென்றலைத் தாலாட்டின. நீலவானம் நீல வண்ண விளக்கொளியில் முடங்கியது.

விருந்து முடிந்தது.

பெரியவர் சொன்ன சேதி: “ஞானசீலன், எனக்கு ஒன்று விட்ட தமக்கை மகள் ஒருத்தி இருக்கிறாள். அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, வாரிசில்லாத என் சொத்துக்களை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது என் விருப்பம், அந்தப் பெண்ணைப் பார்க்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, "புஷ்பவல்லி!” என்றார்.

ஞானசீலனுக்குப் புலன்கள் இயங்க மறுத்தன. வேர்வைக் கொப்புளங்கள் வெடித்தன. நிமிர்ந்து பார்க்க வில்லை.

"ஞானசீலன், பாருங்கள்!”

'இது ஏதடா வம்பாகி விட்டது', என்று எண்ணித் தலை நிமிர்ந்தார் ஞானசீலன்.

புஷ்பவல்லி பட உருக் கொண்டு காட்சி கொடுத்தாள்!

சாப்பிட்ட சாப்பாடு எங்கேதான் போயிற்றோ?

ஒவ்வோர் இடத்திலும் இப்படிப் பெண் உருவில் விதி என்னைப் பயம் காட்டுகிறதா? இல்லை, என மனச் செருக்குக்குச் சவால் விடுகிறதா? இல்லை, என்னுடைய ஒருதலைப்பட்ட போக்கை ஒருநிலைப்படுத்த இப்படிப் பட்ட பெண்களாகத் தோன்றிடச் செய்த விதி என்னும் மாயை என்னை எள்ளி நகையாடுகிறதா?

ஒரு மாதம் தவணை கோரிப் பெற்றுக் கொண்ட திருப்தியுடன் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து சென்றார் ஞானசீலன்.