பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


நீலவண்ண விதானம் வள்ளலாகி, இயற்கை எழிலை வரையாது வாரி வழங்கிக் கொண்டிருந்தது. கண்ணாடிப் பீலியிலிருந்து வழியும் பன்னீர்த் திவலைகள் மேனியில் பட்டால், பட்ட இடம் பட்டுப் போன்று தண்ணென்று இருக்கும். அப்படித்தான் நிலவும் இதமளித்தது. திங்களைப் பற்றிக் கம்பர் பாடிய கருத்து ஒன்று நினைவில் சிமிழ் திறந்தது -‘பிரமன் படைத்த அண்டம் பழசாக ஆகிவிட்டதாம். ஆகவே சந்திரன் என்னும் தச்சன் தோன்றி அதைப் புதுப்பிக்கின்றானாம்’...

பால் நிலவில் பால்முகப் பதுமையின் ஞாபகம் சுடர் விட்டது. மாலையும் கழுத்துமாகத் தோன்றி, நினைவில் அற்புதமான வாணியை நெஞ்சின் காட்சிப் பொருளாக ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில், ஹிருதயத் தளத்தில் காக்காய் முள் குத்தின மாதிரி ஓர் உபாதை நிறைந்தெழத் தொடங்கியது.

ஒவ்வொரு மனித மனத்திலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரட்டைக்குணங்கள் ராஜ்யபாரம் செலுத்துகின்றன. தீமைப் பண்புகள் தலை விரித்தாடும் பொழுது, மனிதன் அவற்றுக்கு அடிமையாகும் கட்டத்தில், விதி சிரிக்கிறது. நற்பண்புகள் நாயகமாக விளங்கும் சமயத்தில், மனிதன் அவற்றால் மேலோங்கி விளங்கும் நிலையில், தெய்வம் சிரிக்கிறது. இந்த மனம் சாமான்யமா? அமிர்தம் சுரக்கும் இடத்தில்தான் விஷமும் பிறக்கிறது

கமலாட்சியும் வாணியும் மாறி மாறித் தோன்றிச் சிரித்தார்கள்.

ஞானசீலனோ உள்ளத்தால் அழுதார். உள்ளத்தால் வாழ்வு நடத்தி ஒத்திகை பார்த்த பிறகே, உடலால் வாழ்வு நடத்த வேண்டும் என்று கொண்டிருந்த ஒரு புதிய தெளிந்த, தத்துவத்தைச் செயல் முறையில் கொண்டுவர