பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேருறக் கண்டுளந்துடித்தேன் ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (3471) எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில் பட்டினி யுற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றன ரென்றே ஒட்டிய பிறராற் கேட்டபோ தெல்லாம் உளம் பகீரென நடுக் குற்றேன் இட்ட இவ்வுலகிற் பசியெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே. (3431) எனவரும் திருவருட்பாப் பாடல்கள் மக்கட் சமுதாயத் திலே பசிப்பணியால் விளையும் துயரங்களை யெண்ணி அடிகளாருள்ளம் அடைந்த வேதனையினை யுணர்த்து வனவாகும்.

உலகியல் வாழ்விற் பசியின் கொடுமையினை உள்ளவாறுணர்ந்து உள்ளங்கவன்ற இராமலிங்க வள்ளலார் மக்கட் சமுதாயத்திலே பசிப்பிணியினை அறவே நீக்கத் திருவுளங் கொண்டு சீவகாருணிய ஒழுக்கத்தை அன்றாட நடைமுறையிற் செயற்படுத்துதற்கென்றே உத்தர ஞான சிதம்பரம் எனப்பெறும் வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவிப் பசிப்பிணி மருத்துவராகத் திகழ்ந்தார். அடிகளாரது அருட்பணி சமுதாய வாழ்வில் நலிவுற்ற மக்களுக்கு உதவுவதே உண்மையான தெய்வத் திருப்பணி யாகும் எனக் கொண்ட அவர்தம் சீவகாருணிய ஒழுக்கத்தினை நன்கு புலப்படுத்துதல் காணலாம்.