பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


தருமொழியாம் என்னில் இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பி அயல் கூடுவதேன் கூறுதியே

(திரு. 3264)

எனவரும் ஆளுடைய அடிகள் அருள் மாலையாகும்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசத்துக்கும் உருகார் என்பது தமிழகத்தில் வழங்கும் பழமொழி யாகும். கற்போர், கேட்போர் நினைப்போராகிய எல்லோரது உள்ளத்தையும் உருக்கும் ஆற்றல் திருவாசகத்துக்கே உண்டு என்பதனை மேற்குறித்த பழமொழியாலறியலாம். மலங்கெடுத்து மனங் கரைக்கும் திருவாசகத்தினை இடைவிடாது ஓதி நெஞ்சம் நெக்குருகப் பெற்றவர் அருட்பிரகாச வள்ளலாராதலின், தாம் பயின்ற திருவாசகம் தம் உள்ளத்தை உருக்கி ஆன்மாவாகிய தம்மையும் தம்மையுடையானாகிய சிவபெருமானையும் ஒன்றுபடுத்திச் சிவானுபவமாகிப் பெரும்பயனை நுகர்ந்து இன்புறச் செய்தது என்பார் நின்வாசகத்தில் ஒருமொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என மணிவாசகப் பெருமானை வள்ளலார் உளம் உவந்து போற்றினார். ஒன்றுவித்துத் தருதலாவது, நெக்குநெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியனாகிய இறைவனை நினைவாரையும் நினைக்கப்படுபொருளாகிய இறைவனையும் பிரித்துணர ஒண்ணாதபடி அவனே தானாகச் செய்தல்.

அருட்பிரகாசவள்ளலார் அறிவுறுத்திய சமரச சன்மார்க்க அநுபவநெறிக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ்வது தாயுமானார் அருளிய பாடற் பகுதியாகும்.