பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


கொண்டார் சிவஞானமுனிவர். தாதான்மிய சமபந்தமாவது, பொருளால் ஒன்றேயாயினும் ஒருவாற்றால் இரண்டாகப் பகுத்துக் கூறுதற்குரிய தன்மையாகிய தொடர்பு. இத்தொடர்பினை 'ஒருமையின் இருமை’ என அழகிய தமிழில் ஆளுடைய பிள்ளையார் புலப் படுத்தியுள்ளமை உன்னுந் தோறும் உவகை தருவதாகும். அவையே தானேயாய் உலகுயிர்கள்தோறும் நீக்கமின்றி விரிந்து நிற்கும் முதல்வன், தன் ஆணையாகிய சத்தியுடன் பேதமும் அபேதமுமின்றி அவ்விரண்டிற்கும் பொதுவாய் நீக்கமின்றி நிற்கும் தொடர்பினை 'ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே' என மெய்கண்டதேவர் (சிவஞான போதச் சூத்திரம்-2) விளக்கியுள்ளார். இங்ஙனம் நீக்கமின்றி நிற்றலாகிய இத்திறம் ஆளுடைய பிள்ளையாரால் ஒருமையின் இருமை யெனக் குறிப்பிடப் பட்டதாகும்.

இங்ஙனம் இறைவன் அம்மையப்பனாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருள் புரிகின்றான் என்பது,

'தன்னிற் பிரிவிலா எங்கோமான்' (திருவெம்பாவை 16)

எனவும்,

'எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்'

(சிவஞான சித்தியார் சுப - 165)

எனவும் வரும் ஆன்றோர் உரைகளால் இனிதுணரப்படும்,

இறைவன் தனது அருளாகிய சிற்சத்தியுடன் வேறாதலும் (பேதமாதலும்) ஒன்றாதலும் (அபேதமாதலும்) இன்றி அவ்விரண்டிற்கும் பொதுவாய்த்