பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுள் கிடக்கும் பெருமலை 101

(தையல்-அழகு, தையலாள்-அழகுள்ளவள். செஞ்சரம்-சிவந்த அம்பு)

என்பது பாசுரம். பிராட்டியைப் பிரிந்த பெருமான் விண்ணில் மேகத்திரளைக் கண்டபோது (கார்காலத்தில்) அவள் பிரிவைப் பொறுக்கமாட்டாமல் பட்ட பாட்டை அநுமன் காண்கின்றான். ‘வசிட்டனிடம் பயிற்சி பெற்று கடல்போல் கம்பீரமாக இருப்பவன் என்று பெரும்புகழ் பெற்றிருக்கும் இராமன் ஒரு பெண்ணின் நிமித்தம் இப்படித் துவள்கின்றானே’ என்று எண்ணிய அநுமன் கடல் கடந்து அசோகவனத்தில் பிராட்டியின் திருமேனியைச் சேவிக்கப்பெற்ற பிறகு ‘அந்தோ! இப்படிப் பட்ட பிராட்டியைப் பிரிந்த பின்பும் உயிர் தரித்துள்ளானே இராமன்; அவனிலும் மிக்க கல்நெஞ்சன் உண்டோ?’ என்று வெறுப்புடன் வியக்கலானான் என்று குறிப்பிடுவர் வால்மீகி. இந்திரிய நிக்கிரகனான திருவடியையும் இப்படி ஈடுபடுத்தவல்ல வடிவழகுடையவளாதலால் சீதையைத் “தையலாள் என்றே உருவகித்தார் ஆழ்வார். இப்படிப்பட்ட எழிலுடைச் சாயலாள் மீது காதல் கொண்ட இராவணனுடைய பொன்முடிகள் பத்தும் போர்க்களத்தில் உருளும்படி சரந்துரந்தவன் வீரராகவன். அவனே திருவெவ்வுள்ளுரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான் என்கின்றார் ஆழ்வார். இப்பதிகத்திலுள்ள பல சுருதிப் பாடல் நீங்கலாக ஒன்பது பாசுரங்களும் ‘எவ்வுள் கிடந்தானே” என்று முடிகின்றன.

மூன்றாவது பாசுரத்தில் இரண்டு.அவதார நிகழ்ச்சிகளும் அநுசந்திக்கப் பெறுகின்றன. எவ்வுள் கிடந்த எம்பெருமான்யார்?

“முன்னோர் தூது வானரத்தின்

வாயில் மொழிந்து, அரக்கன் மன்னுர் தன்னை வாளியினால்

மாள முனிந்து, அவனே பின்னோர் தூது ஆதிமன்னர்க(கு)

ஆகிப் பெருநி லத்தார் இன்னார் தூதன் என நின்றான்.’

(வானரம்-சிறியதிருவடி, அரக்கன் மன்னுர்-இலங்கை; வாளி-அம்பு, மாள மாண்டுபோம்படி முனிந்து-கோபித்து; ஆதி மன்னர்-பாண்டவர்கள்; பெருநிலத்தார் . உலகினர்)

12. பெரி. திரு, -2.2:3.