பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரு. எஸ். இராமலிங்கத்துடன் திருக்கடிகை, திரு எவ்வுளுர் திருநின்றவூர், திருவல்லிக்கேணி ஆகிய நான்கு திவ்விய தேசங்களையும் சேவிக்கும் பேறு பெற்றேன்.

இந்தத் திவ்விய தேச யாத்திரையில் யான் பெற்ற அநுபவம் 15 கட்டுரைகள் கொண்ட “தொண்டை நாட்டுத் திருப்பதிகள்” என்ற பெயருடன் இப்போது நூல் வடிவாக வெளிவருகின்றது. ‘தொண்டை நாடு சான்றோருடைத்து’ என்பார்கள் அந்த நாட்டைச் சார்ந்த சான்றோர் ஒருவருடைய அணிந்துரையுடன் மற்றொரு சான்றோருக்கு அன்புப் படையலாக்கப் பெற்று நூல் ‘பீடு நடையுடன்’ தமிழ் கூறு நல்லுலகில் உலா வருகின்றது. ‘மலை நாட்டுத் திருப்பதிகள்’ என்ற நூலைப் படித்த அன்பர்கள் இதனையும் வரவேற்பர் என்ற நம்பிக்கை என்றும் என்பால் உண்டு.

நடு நாட்டுத் திருப்பதிகளாகிய திருக்கோவலூர், திரு அயிந்திரபுரம் ஆகிய இரண்டு திருப்பதிகளையும் தொண்டை நாட்டுத் திருப்பதிகளுடன் சேர்த்துக் கூறும் மரபினை ‘நூற்றெட்டுத் திருப்பதிக்கோவை’ ‘நூற்றெட்டுத் திருப்பதிப் பெருமாள் கோவை’, ‘நாலாயிரப் பாசுரப்படி நூற்றெட்டுத் திருப்பதிக்கோவை’ ஆகிய மூன்று நூல்களிலும் காணலாம். அந்த மரபினைப் பின்பற்றி நடு நாட்டுத் திருப்பதிகள் பற்றிய கட்டுரைகள் (14, 15) இரண்டும் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

இந்த நூலிலுள்ள பதினைந்து கட்டுரைகளிலும் ஆழ்வார்களின் பக்தியுணர்ச்சி, பாசுரங்களின் சொல்வளம், அவற்றில் அகப்பொருள் துறைகள் அமைந்துள்ள அருமைப்பாடு முதலியவற்றைக் காணலாம். என் சிறிய உள்ளம் ஆழ்வார்களின் திருப்பாசுரங்களில் ஆழங்கால் பட்ட முறையைக் கட்டுரைகள் ஒருவாறு விளக்கும். இந்நூலைப் படிப்போரின் உள்ளங்களையும் அவை அத்திருப்பாசுரங்களை அநுபவிக்கத் தூண்டும் கருவிகளாக அமையக் கூடுமாயின் அதனை யான் பெற்ற பெரும் பேறாகக் கருதுவேன்.

இந்நூலிலுள்ள 11 எண்ணுள்ள கட்டுரை ‘சிவத்திரு ஞானியாரடிகள் நூற்றாண்டு விழா மலரிலும்’, 14 எண்ணுள்ள கட்டுரை ‘திருப்பாதிரிப் புலியூர் பாடலே சுவரர் குடமுழுக்கு விழா மலரிலும்’, 15 எண்ணுள்ள கட்டுரை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தார் வெளியிடும் ‘சப்தகிரி’ என்ற திங்கள்

ix