பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

மாமல்லபுரம் தமிழருடைய நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றது. தமிழகத்தில் சிற்பக்கலை வளர்த்த பேரரசர் களில் தலையாய மாமல்லனிற் புகழ் எல்லாம் இந்தக் கடல்மல்லையில்கற்பாறையில் இழைக்கப் பெற்ற கவின் உருவங்களில் அடங்கிக்கிடக்கின்றன. இவற்றைக் கல்லால் இழைத்த கவிதைகள்’ என்று புகழ்ந்தாலும் அது மிகையன்று. தமிழ் நாட்டின் கலைச் செல்வம் நிறைந்த இடம் என்று உலகோர் புகழ்ந்து கூறும் கடல் மல்லையை மாமல்லன் பேரால் மாமல்லபுரம் என்று வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? மாமல்லனது கனவெல்லாம் நனவாக வேண்டிய இடம் இது. மலைமீது நின்று சுற்றிப்பார்த்தால் நம் கண்வடத்திற்குட்பட்ட இடங்களிலெல்லாம் அரை குறையான சிற்பங்கள் அங்குமிங்கு மாகக் கிடப்பதைக் காணலாம். என்ன் காரணத்தாலோ மாமல்லனின் கனவு முழுவதும் நனவாகாமல் போயிற்று. அது நனவாகியிருந்தால் மாமல்லபுரம் கல்லால் இழைத்த ஒரு மாபெரும் கலைக் கூடமாக வளர்ந்திருக்கும் என்பதற்கு ஐயம் இல்லை.