பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

(கச்சி-காஞ்சிபுரம்; பிரமனால் பூசிக்கப்பெற்ற தலம் என்பது பொருள். கா-பிரமன்; அஞ்சி-பூசிக்கப்பெற்ற புரம்-இடம்; அயனார்.நான்முகன்; சகம்-பூமி)

என்பது அடிகளாரின் திருவாக்கு. நான்முகன் படைப்பில் உம்பர் உலகாகிய அமராவதிப் பட்டணமும் காஞ்சி மாநகரும் மிக அழகாக அமைந்தனவாம். இரண்டின் தராதரத்தை மதிப்பிட்டறிய விழைந்த நான்முகன் இரண்டையும் ஒரு தராசுக் தட்டுகளில் இருபுறமும் வைத்துத் தூக்கினானாம். அழகுமிக்க காஞ்சி நகரைக் கொண்ட தட்டு கீழே வந்தது; சற்று அழகு குறைந்த அமராவதியையுடைய தட்டு மேலே போய் விட்டது. காஞ்சியம்பதியும் உம்பர் உலகமும் இயல்பாகக் கீழும் மேலுமாக நிற்பதற்குக் கவிஞர் கூறும் கற்பனை எண்ணி மகிழத்தக்கதாக உள்ளது. இத்தகைய அழகான ஊரில்தான் பேரருளாளனாகிய வரதராசன் திருக்கோயில் கொண்டு சேவை சாதித்து வருகின்றான். நம்முடைய காஞ்சி யாத்திரையில் முதலில் அவனைக் காண விழைகின்றோம். காஞ்சிப் பேருந்து நிலையத்திலிருந்து அவன் திருக்கோயிலை நோக்கிச் செல்லும் நகரப் பேருந்து ஒன்றில் ஏறி அவனது திருக்கோயிலை அடைகின்றோம்.

இத்தலத்தைப்பற்றிய புராண வரலாறு நம் சிந்தையில் எழுகின்றது. வரலாறு இதுதான்: எம்பெருமான் நாராயணனின் திருவருளால் நான்முகன் பதினான்கு உலகங்களுக்கும் தலைவனானான். பிறந்த குலச்செருக்கு, அடைந்த கல்விச் செருக்கு, பெற்ற அதிகாரச் செருக்கு முதலியவை அவன் ஞானக்கண்களை மறைத்தன. இங்ஙனம் அகந்தைத் திரைகளால் கவரப்பெற்ற நான்முகன் கறந்த பாலில் மறைந்து நிற்கும் நெய்யே போல் எல்லாப் பொருள்களிலும் உள்ளே உறைந்து நிற்கும் எம்பெருமானைத் தனது திறமையினால், செய்யக் கூடிய யோகத்தினால், காண முயன்றான். ஆனால், அங்ஙனம் காண்பதற்கு விரோதியாகவுள்ள மாளாத ஒரு வலிய கர்மம் இவனை அந்த யோகத்தினின்றும் விலக்கிவிட்டது; அறிவும் மழுங்கிவிட்டது. இங்ஙனம் தடைசெய்த தன் கர்மம் கழிவதற்கு ஒரே வழி ஆயிரம் அசுவமேதயாகங்கள் புரிவதே என்பதை அசரீரியால் அறிந்தான். சத்திய விரதம்[1] (மெய்விரதம்) என்னும் திருத்தலத்தில் செய்யப்பெறும் ஒர் அசுவமேத யாகம் ஆயிரம் அசுவமேத யாகங்களுக்கு நிகரானது என்பதையும் தெரிந்து

  1. இது காஞ்சிபுரம். அத்திகிரி பெருமாள் கோயில் எனவும் வழங்கப்பெறும்.