பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

“மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
கனல்புகும் கபிலக் கல்”[1]

என்று கல்லிலே பொறிக்கப்பெற்ற ஒரு கவிதையால் அறியலாம்.

மேலுரிலுள்ள உலகளந்தாரைச் சேவித்துத் திரும்பும் நாம் கீழுரிலுள்ள வீரட்டானரையும் காண விழைகின்றோம். அவரை வழிபட்டபிறகு ஆற்றின் வடகரையிலுள்ள அறையணிநல்லூர் அறையணி நாதரையும் அவரது துணைவி அருள் நாயகியையும் கண்டு வழி படுகின்றோம். அறையணி நல்லூரை அடைய (இது அரகண்ட நல்லூர் என்று வழங்கப்பெறுகின்றது) ஆற்றினைக் கடக்கும்போது ஆற்றின் நடுவில் வீரட்டானேசுவரர் கோயிலுக்கருகில் ஒரு பெரும் பாறையைக் காணலாம். இப்பாறையின் மீதுள்ள கோயிலும் அதனை அடைய அமைந்துள்ள படிக்கட்டுகளும் ஒர் இடைச்சியால் கட்டப் பெற்றவை என்று கூறுவர் அப்பகுதி மக்கள். ஆகவே, அப்பாறை ‘இடைச்சிக் குன்று’, ‘இடைச்சிக் கல்’ என்று வழங்கப்பெறுகின்றது. “வெண்ணை உருகுமுன் பெண்ணை பெருகும்” என்பது பழமொழியல்லவா? ஒரு சமயம் இடைச்சி ஒருத்தி திருக்கோவலூரிலிருந்து ஆற்றைக் கடந்து வந்தபோது, அக்கரையில் இறங்கும்போது நீரே இல்லாதிருந்த ஆற்றில், இக்கரையை அடையும் முன்னரே வெள்ளம் பெருகியதாம். அவ்விடைச்சி அப்பாறையில் ஒதுங்கி நின்று தப்பித்தாளாம். அவளே அச்சிவன்கோயிலைக்கட்டிப் படிகளை அமைத்தாள் என்பது செவிவழிச் செய்தி. இலிங்கம் கபிலேசுவரருடையது. சங்கப் புலவரான கபிலரது கோயிலே அது என்றும் சிலர் கூறுவர். காரி நாடு வேள்வித் தீயைக் காக்கும் அந்தணரு டையது என்பதாக,

“கழபுனைந் திருந்தடிக் காரிநின் நாடே
அழல்புறந் தரூஉம் அந்தண ரதுவே.”[2]

  1. வேங்கடம் முதல் குமரிவரை -பொன்னியின் மடியிலே பக். 35.
  2. புறம் - 121