பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

குருவும் சீடரும் காஞ்சி சென்று வரதர் சந்நிதியில் அதனை அரங்கேற்றினர். பெருமாள் அர்ச்சகர் மூலம் உமக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டாராம். ஆவேசமுற்ற அர்ச்சகரை நோக்கி ஆழ்வானும், ‘நான் பெற்ற பேறு நாலூரானும்[1] பெறவேண்டும்’ என்று வரம் கேட்டார். அருகிலிருந்த இராமாநுசர் வியப்புக் கடலில் ஆழ்ந்தார். ‘தாம் கண் இழப்பதற்குக் காரணமாக இருந்த பரம விரோதியிடம் காட்டுகிற இந்தப் பரிவை, இந்தக் கருணையை, என்னென்பது? இவரை அறிய அறிய நான் என் அறியாமையைத்தான் காண்கின்றேன்!’ என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார். குணம் என்னும் குன்றேறி நின்ற தம் சீடரை மெச்சிப் புகழ்ந்தார் இராமாநுசர். இங்ஙனம் வரதரின் கைங்கரியபரர்களை எண்ணிக் கொண்டிருக்கும்பொழுது திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின் பாசுரம் நம் சிந்தையில் எழுகின்றது.

“பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்(து)
இருளாசை சிந்தித்(து) இராதே-அருளாளன்
கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க் கண்ணன்தாள்
இச்சித்து இருப்பதுயாம் என்று”[2]

(பொருள்-செல்வம்: பூங்குழலார்-மகளிர்; இராதே-இராமல்; தாள் - திருவடிகள்; இச்சித்து-விரும்பி)

என்ற பாசுரத்தை மிடற்றொலி செய்து ஓதி உளங்கரைகின்றோம். திருவரங்கத்து அழகிய மணவாளன் இராமாவதாரக் கூறுடையவன் என்றும், திருவேங்கடத்துத் திருவாழ்மார்பன் கண்ணன் அவதாரச் கூறுடையவன் என்றும், அத்திகிரி அருளாளன் இந்த இரண்டு அவதாரக் கூறுகளையுடையவன் என்றும் வைணவர்களிடையே வழங்கி வரும் கருத்தினைச் சிந்தித்தவண்ணம்[3] ‘சொன்ன வண்ணம் செய்த பெருமான்’ சந்நிதியை நோக்கிப் புறப்படுகின்றோம்.

***

  1. நாலூரான் - சோழன் அவையிலிருந்த ஒருவன், கூரத்தாழ்வான் கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்.
  2. நூற்.திருப்.அந் -74
  3. தேசி.பிரபந் - 81, 82, 83.