பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

(நாகத்து அணை - பாம்புப் படுக்கை; குடந்தை - கும்பகோணம், வெஃகா - திருவெஃகா; திருஎவ்வுள் - திருவள்ளுர்; அரங்கம் - திருவரங்கம்; பேர்-திருப்பேர் நகர்; அன்பில்-அன்பில் என்னும் திருப்பதி.)

என்ற திருப்பாசுரம் நம் நெஞ்சில் எழுகின்றது. அன்பருடைய நெஞ்சில் புகுவதற்காகவே எம்பெருமான் திருக்குடந்தை, திருவெஃகா, திருஎவ்வுளுர், திருவரங்கம், திருப்பேர் நகர், அன்பில் ஆகிய திவ்விய தேசங்களில் எழுந்தருளியுள்ளான் என்ற கருத்துடைய இப்பாசுரமே மேற்குறிப்பிட்ட ஸ்ரீவசன பூஷண சூத்திரத்திற்கு மூலம் என்பதை எண்ணி மகிழ்கின்றோம். இத்திருக்கோயில் காஞ்சியில் ஆடிசன் பேட்டைக்கு அருகில் வரதராசப் பெருமாள் சந்நிதியை நோக்கிச் செல்லும் கீழ்மேல் சாலைக்கு வடபுறமாகச் சற்று உள்ளே தள்ளி உள்ளது என்பதை அறிந்து அக்கோயிலுக்கு அருகிலுள்ள பேருந்து நிற்கும் இடத்தில் இறங்குகின்றோம். திருவெஃகா மிகப்பழமையான திருக்கோயில். பெரும்பாணாற்றுப் படையில் இத்திருக்கோயில் பற்றிய குறிப்பு காணப் பெறுகின்றது.[1] இத்திருக்கோயில் எம்பெருமானைப் பொய்கையாழ்வார்[2] ‘பேயாழ்வார்’[3] திருமழிசையாழ்வார்[4] திருமங்கையாழ்வார்[5] நம்மாழ்வார்[6] என்ற ஐந்து ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்துள்ளனர். கணி கண்ணன் பொருட்டுத் திருமழிசையார் சொன்ன வண்ணம் செய்தப் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்ற பேரவா எவர் மனத்திலும் எழுதல் இயல்பேயன்றோ? பெருமாள் அன்பர்களின் தமிழுக்கு வசமாகிப் பின்சென்ற வரலாறு தமிழகத்தின் இதயத்தையே கொள்ளை கொண்ட வியப்பை எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம். இந்த வரலாறு சிவநேசச் செல்வரான குமரகுருபரரின் வாக்கிலும் இடம் பெற்றுப் பசுமை மாறாத தன்மை எய்தியதையும் சிந்திக்கின்றோம்.

“பழமறைகள் முறையிடப்
       பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே”[7]

  1. பெரும்பாண் -அடி (290-91)
  2. முத.திருவந்-77
  3. மூன். திருவந்- 26,34,62,64,76
  4. திருச்.விருத்-63, 64; நான். திருவந்-36
  5. பெரி.திரு 2.6:4; 10.1:7 சிறிய திருமடல்-கண்ணி-70; பெரிய திருமடல்-கண்ணி-{126-7) திருநெடுந்-8,9,13,14.
  6. . திருவிருத்-26; திருவாய் 5.10:6.
  7. மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் : காப்பு-1.
    (மறைகள்-வேதங்கள்; கொண்டல்-மேகம்; ஈண்டு திருமாலைக் குறித்தது).