பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 யன்றி ஆல் என்பதனைக் கூறினாரிலர். தொல்காப்பியர் திருவள்ளுவர்க்குப் பிற்பட்டவராயிருப்பின் 'ஆல். என் பதனை மூன்றாம் வேற்றுமை உருபாகக் கூறியிருப்பர். அன்றியும் சொல்லாராய்ச்சி முறைப்படி நோக்கு மிடத்தும் 'ஆன்' அடியாகவே 'ஆல்' தோன்றியுள்ளது என்று அறியலாகும், ஆதலின் தொல்காப்பியர் திருவள்ளுவர்க்குக் காலத்தால் முற்பட்டவர் என்று கூறுவது மறுக்க முடியாத உண்மையாகும். இனி இப்பெரும் புலவர் வாழ்ந்த காலத் ஆராய்வோம். தொல்காப்பியர் காலம்: தமிழகப் புலவர்கள் தமிழை நினைந்து தமிழுக்காக வாழ்ந்தனர்; தம்மை மறந்தனர். தம்மைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி வைப்பதும் தம் ஆன்றவிந்து அடங்கிய வாழ்வுக்குப் பேரிழுக்காகும் எனக் கருதினர்போலும். பெரியோர் வாழ்க்கைக் குறிப்புகளையும் மறத்தற்கரிய நிகழ்ச்சிகளையும் குறித்து வைப்போரும் நம் நாட்டில் சிலராயினர். நாடாண்ட அரசர்களைப்பற்றிய நல் வரலாறுகளையே நாம் அறியக் கூடிய நிலையில் இல்லாத போது புலவர்களைப்பற்றிய வரலாறுகளை எப்படிப் பெறமுடியும்? தம்மைப் புகழ்ந்துகொள்ளக் கூசுதலும், பிறரைப் புகழ உளங்கொள்ளாமையும், இன்றைய தமிழர் களிடையே காணக்கூடிய இயல்புகளாகும். பண்டைய புலவர்கள் தன்மைப் புகழ்ந்து கொள்ளாது போயினும், பிறரை உளமாரப் புகழ்வதில் அளவுகடந்து சென் றுள்ளனர். ஆகவே அப்புகழுரைகள் அனைத்தும் வரலாற்றுக்குப் பயன்படுவனவாக அமைந்தில.