பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262



ஆண்டவனுடைய தூதர் என்ற முறையில், பெருமானார் அவர்கள் அவனுடைய கட்டளைகளை வாக்கினாலும், செயலினாலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதே தங்களுடைய கடமை எனக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவனுடைய உத்தரவு இல்லாமல் ஒரு சட்டத்தையும் தாமாக ஏற்படுத்தவில்லை என்பதை விளக்குவதற்காகப் பெருமானார் அவர்கள், “'நியாயமானது' 'விலக்கப்பட்டது' சம்பந்தமான விஷயங்கள் எதுவும் என்னால் உண்டானதாக நினைக்காதீர்கள். ஆண்டவன் தன்னுடைய வேதத்தில் எதை ஆகுமானதாக்கி இருக்கின்றானோ, அதையே நானும் ஆகுமானதாக்கியுள்ளேன். ஆண்டவன் எதை விலக்கி இருக்கின்றானோ, அதையே நானும் விலக்கி இருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.


205. தருமம் செய்து விடுங்கள்

ஆயிஷா நாச்சியார் அவர்களிடம் நாணயங்கள் சிறிது இருப்பது பெருமானார் அவர்களுக்கு நினைவு வந்தது. எனவே அவர்களை அழைத்து: “ஆயிஷாவே அந்த நாணயங்கள் எங்கே இருக்கின்றன? ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாமலா, முஹம்மது அவனைச் சந்திப்பது? போய் அவற்றை ஆண்டவனுடைய வழியில் தருமம் செய்து விடும்” என்று பெருமானார் அவர்கள் நோய் கடுமையாக இருந்த நிலைமையில் சொன்னார்கள்.

நாச்சியார் அவர்களும் அவ்வாறே தருமம் செய்து விட்டார்கள்.


206. பெருமானார் அவர்களின் பிரிவு

பெருமானார் அவர்களுக்கு நோய் மிகுந்தும் குறைந்தும் காணப்பட்டது. -

ஹிஜ்ரி பதினோராவது வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி திங்கட்கிழமை காலையில் பெருமானார் அவர்களுக்கு வெளித் தோற்றத்தில் உடல் நலமுடன் இருப்பதாகத் தெரிந்தது.