பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

ஆம். தொடக்கத்திலிருந்து கடைசி நிலையம் வரை ஒரே மூச்சாகச் சென்றாலும், ஆங்காங்கே இறங்கி ஏறினாலும் ஒரே கட்டணம். அதுவும் ஐந்து கொபெக். ஆனால் எவ்விடத்திலும் மேலேறி வெளியே வந்து விடக்கூடாது. அப்படிச் செய்யாத வரையில் பலமுறை வேண்டுமானாலும் பாதாள இரயிலில் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்று அறிந்துகொண்டோம்.
இதற்குள் எதிர்ப்பக்கத்திலிருந்து ஒர் இரயில் வந்து நின்றது. அதில் ஏறிச் சென்றோம். வழியில் இறங்கி இரண்டு நிலையங்களைக் கண்டு மகிழ்ந்தோம். இன்றைக்கு இவ்வளவு போதுமென்ற நினைவோடு வெளியேறி, தெருவிற்கு வந்து சேர்ந்தோம். வெளியே வரும்போதும் எஸ்கலேட்டர் வழியே எப்படியோ பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்து விட்டேன்.
நாங்கள் பாதாளப் பாதையிலிருந்து வெளியேறிய இடம் எங்கள் ஒட்டலுக்கு இரண்டொரு பர்லாங்கு துரத்தில் இருந்தது. ஒட்டல் பக்கம் அடையாளந் தெரிந்தது. ஆகவே வாடகை வண்டியேராமல் நடந்தே சென்றோம். இரவு ஏழு மணி இருக்கும். தெருவெல்லாம் மின்னொளி. நடை பாதையெல்லாம் விரைந்து செல்லும் மக்கட் கூட்டம். இங்கும் அங்கும் பஸ் நிற்குமிடம், டிராம் நிற்குமிடம், டிராலி பஸ் நிற்குமிடம். இவ் வாகனங் களின் .போக்கு எங்களுக்கு மயக்கத்தை விளைவித்தது. நம் நாட்டில் வண்டிகளெல்லாம் இடப்புறம் போக வேண்டும். அந்நாட்டிலோ