பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


முதலியாருக்குக் குலை நடுக்கம் எடுத்து விட்டது. "பாவி, எமன் மாதிரி நேரிலேயே வந்துவிட்டானே" என்று அவரது மனம் கறுவிக் கொண்டது. எனினும், அவர் வாய் விட்டு, "வாங்கய்யா" என்றுகூறிக்கொண்டார்.

"என்ன வே, நானும் ஆள்மேலே ஆள் அனுப்பிப் பாத்துட்டேன். ஒரு செப்புக் காசு நகர மாட்டேங்குதே?" என்று எகத்தாளமாகக் கேட்டார் மைனார் முதலியார்.

"என்ன முதலியார்வாள், நிலைமை தெரியாதா, உங்களுக்கு? பணம் வந்தால் நானே கொண்டு வந்து தரமாட்டேனா?என்று கெஞ்சாத குறையாய்ச் சொன்னார் கைலாசமுதலியார்.

"எனக்கா தருவேரு? அந்தத் தாதுலிங்க முதலியாருக்குக் கொண்டு கொடுப்பீரு. அவரு பெரிய பணக்காரரு. அவருக்குப் பாக்கி வைக்கக் கூடாது. என்ன அப்படித் தானே?

"அதெல்லாமில்லை. அவர் கோர்ட் மூலமாய் நடவடிக்கை எடுக்கிறதுன்னு. ஆரம்பிச்சார். அதனாலே தான்..." என்று இழுத்தார் கைலாச முதலியார்.

"நானும் ஏன் அப்படிச் செய்யலைன்னு புத்தி சொல்லிக் கொடுக்கேரா?" என்று எகத்தாளமாகப் பேசி விட்டு, "இந்தா அந்தான்னு மாசக்கணக்கா சொல்லிக்கிட்டு வாரீரே. இந்த ஓட்டை வீட்டை அடமானம் வச்சதோடே, உம் கடன் தீர்ந்து போச்சுன்னு நினைச்சிட்டீரா? இல்லெ. கேக்கிறேன்_” என்று முகத்தில் உக்கிர நெருப்பு கனன்று மிஞ்ச, முறைத்துப் பேசினார் மைனர்.

கைலாச முதலியாருக்குப் பதில் சொல்ல நாக்கே வளையவில்லை.

"கோபிக்காதிங்க, வந்து."