பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


அம்மாவின் வற்புறுத்தலுக்காக, வேண்டாவெறுப்பாக, சில பருக்கைகளைக் கொறித்துத் தீர்த்தாள். சாப்பிட்டு முடித்ததுமே சங்கர் ஆஸ்பத்திரிக்குச் சென்று வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுப் போய் விட்டான். சீக்கிரமே திரும்பி வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றவன் மணி ஒன்பது அடித்தும் வரவில்லை...

எனவேதான் கமலா என்னமோ ஏதோ என்று தவித்துக் கொண்டிருந்தாள்; சங்கர் காரணமில்லாமல் எங்கும் காலம் தாழ்த்த மாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

கடந்த மூன்று தினங்களாகவே கமலாவிடமிருந்த உற்சாகம் குடியோடிப் போய்விட்டது.கைலாச முதலியார் வீட்டில் விழுந்த இரட்டைச் சாவுகளும், மணி அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போன நிகழ்ச்சியும் அவளது குதூகலத்தையெல்லாம் பறித்துக்கொண்டு போய்விட்டன.தன் தந்தை தன் கல்யாண விஷயமாய்ச் சம்மதிக்காவிட்டாலும், தன் அண்ணன் சங்கர் இருக்கும்போது தனது இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது என்று இறுமாந்திருந்த கமலாவுக்கு, சந்தர்ப்பம் செய்த சதிபோல, அந்தக் கோர நிகழ்ச்சி நடந்தேறி விட்டது. அன்றிலிருந்து மங்கள பவனத்தில் கமலாவின் கலகலப்பான பேச்சும் சிரிப்பும் கேட்கவில்லை; அவள் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஹிந்தி சங்கீதம் ஒலிக்கவில்லை; மங்கள பவனத்திலிருந்த ரேடியோ அன்று முதல் ஊமையாகி விட்டது.

"மூன்று நாட்களாகியும் இன்னும் அத்தானைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே. நாளையாவது கொடுத்து வைக்குமா? இல்லை சங்கர் சொன்னதைப் பார்த்தால் இனிமேல் அந்தப் பாக்கியமே எனக்குக் கிட்டாமல் போய் விடுமா?"

கமலாவின் மனம் குரங்குப் பிடிக்குள் சிக்காமல் தப்பித் தப்பி ஓடிக் கொண்டிருந்தது; அதன் வெறியாட்-